அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது… மாற்றம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் ஜிகேஎம் காலனியில் நடைபெற்று வரும் சமுதாய நலக்கூடக் கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளியைத் திறந்து வைத்த முதலமைச்சர், கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
“கொளத்தூர் எனது சொந்த தொகுதி. எங்க வீட்டுப்பிள்ளை மாதிரி பார்க்கிற தொகுதி. எப்போது வேண்டுமானாலும் இங்கு வருவேன்.
அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை எப்படி இருந்தன என்பது குறித்து நன்றாகவே தெரியும். ஏமாற்றுகிற நிதி ஒதுக்கீடு அல்ல. வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுவே வெள்ளை அறிக்கைதான்.” என்றவரிடம், அமைச்சரவை மாற்றம் மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில், ”ஏமாற்றம் இருக்காது ஏற்றம் இருக்கும்” என்றார்.