சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரும் பல குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று 01-08-2023 ஆம் தேதி அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் திரு. முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதி வேகமாக வந்த கருப்பு நிற ஸ்கோடா, போலிஸ் ஜீப் மீது மோதி நின்றது. அதன் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர்.
அதில் ஒருவர் அரிவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டிய நிலையில் காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள்.
மேற்படி காயம்பட்ட இருவரில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத். வயது 35, த/பெ. சுப்பிரமணி என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி. 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் மற்றொரு நபர் பெயர் ரமேஸ், வயது 32. த/பெ. சுந்தரம் என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category. HS.No.18/20) குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை. 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மீரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மேற்படி காயம்பட்ட உதவி ஆய்வாளர் திரு. சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்ட இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.