”விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும்!’’ - லயோலா மணி

vijay
விஜய்
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, பாடலை அறிமுகம் செய்து வைத்த விஜய், மாநாட்டிற்கான தேதியை விரைவில் அறிவிப்பேன் என்றார். விஜய்யின் அரசியல் பயணத்தில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், த.வெ.க.வின் எதிர்கால செயல்பாடு எப்படி இருக்கும்? உறுப்பினர்கள் சேர்க்கை எப்படி இருக்கிறது? என்ற பல கேள்விகளை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் லயோலா மணியிடம் முன்வைத்தோம்.

கட்சியின் கொடி, பாடலை விஜய் வெளியிட்டிருக்கிறார். மக்களிடம் கட்சிக்கான வரவேற்பு எப்படி உள்ளது?

தமிழக வெற்றிக் கழகம் என்பது ‘மற்றும் ஒரு அரசியல் கட்சி’ கிடையாது . அது மாற்றத்தை ஏற்படுத்த வருகிறது. இந்த மண்ணுக்கான, மக்களுக்கான, பண்பாட்டுக்கான கட்சியாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களும் மாற்று அரசியல் வர வேண்டு என விரும்புகிறார்கள். அதனடிப்படையில் த.வெ.க.வின் வருகை என்பது கொண்டாடப்படுகிறது.

ஏற்கெனவே பல கட்சிகள் இங்குள்ளன. இந்த சூழலில் த.வெ.க.வின் வளர்ச்சி எப்படி இருக்கும்?

கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு என்று பெண்கள் தலைமையில் ஐந்து பேர் கொண்டை ‘சேர்க்கை அணி’ என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை தோராயமாக 90 லட்சம் பேர் கட்சியில் சேர்ந்திருப்பார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாநாட்டிற்கு முன்போ அல்லது மாநாட்டிலோ வெளியிடப்படும். 

வாக்காளர் அடையாள அட்டையை வைத்துத்தான் த.வெ.க.வில் உறுப்பினராக இணைய முடியும். அதற்கேற்ற வகையில்தான் உறுப்பினர் சேர்க்கை செயலியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்சியில் சேரக் கூடிய உறுப்பினர்கள் அதிகாரப் பூர்வமானவர்கள்.

தமிழ்நாட்டு அரசியல் என்பது சாதி, மத அடிப்படையிலான பிளவுவாத அரசியலாகவும் ஊழலும் வாரிசு அரசியலாகவும் உள்ளது. இதற்கு ஒரு எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் உண்மையான சமூக நீதியையும், சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு சரியான தலைமை வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கக் கூடிய நடிகர். கவர்ந்திழுக்கக் கூடிய நடிகராக மட்டுமல்லாமல்; கருத்தியல் தலைவராகவும் அவர் உள்ளார். அதனால்தான் அம்பேத்கரை, பெரியாரை, காமராஜை, காயிதே மில்லத்தை படிக்க சொல்கிறார். தன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை விஜய் மூன்று பக்க அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். கட்சியில் இணையக் கூடியவர்களை உறுதிமொழியை படிக்கச் சொல்லுகிறார். அதில் உடன்படுபவர்களையே கட்சியில் இணையச் சொல்கிறார்.

Loyola Mani
லயோலா மணி

த.வெ.க.வின் செயல்திட்டம் எப்படியானதாக இருக்கும்?

த.வெ.க. பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நிற்கக் கூடிய கட்சி. அதனால்தான் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராக விஜய் அறிக்கை வெளியிட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் எளிய மக்கள் உயிரிழந்தபோது மாநில அரசின் தவறை சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு வேண்டாம் என சொல்கிறார்.

த.வெ.க.வின் செயல் திட்டம், கொள்கை வரவு விரைவில் நடைபெற இருக்கின்ற மாநாட்டில் விஜய் வெளியிடுவார்.

மற்ற கட்சியிலிருந்து வரும் தலைவர்களை வரவேற்பீர்களா?

மாற்று கட்சியிலிருந்து த.வெ.க.வுக்கு வரக் கூடியவர்கள் மாற்றம் வேண்டும் என நினைக்கிறார்கள். ஆளும் கட்சி, ஆண்ட கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணையும் முயற்சியில் உள்ளனர். அந்த வேலைகளை கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் பார்க்கிறார்கள். கட்சியில் யாரெல்லாம் சேர்கிறார்கள்; அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதெல்லாம் மாநாட்டில் தெரியும்.

விஜய் முதன்மை சக்தியாக வருகிறார். த.வெ.க. ஆளும் கட்சியாக வேண்டும்; விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற புரிதலோடுதான் கட்சி நிர்வாகிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவைத் தலைவர்தான் எடுப்பார். அவருக்கு நடிப்பு என்பது தொழில். நடிகர் என்ற நிலையில் இருக்கக் கூடிய தலைவர் அவர். நடிகராக இருந்தார்; இன்று தலைவராக மாறிவிட்டார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com