தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை எதிர்த்தும் கண்டித்தும் நடிகர் விஜய்யின் த.வெ.க. செயற்குழுவில் இன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சில தீர்மானங்கள் விவரம்:
”மாநிலத்தின் தன்னாட்சி உரிமை கோரும் எங்கள் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கு உரிமையானது. அதன்படி எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும் இந்த விஷயத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசையும் இச்செயற்குழு எதிர்க்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக ஆக்கும். சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும் விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப்பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்ட ரீதியாக போராடவும் தயங்காது.
இலங்கை தொடர்பான விஷயங்களில் தமிழக அரசைக் கலந்தாலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்; இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும்; ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய, தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவாக்கப்பட்ட பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன்பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எப்படிக் கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவுபடுத்தி இருக்கிறது. தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற் பகுதியைக் கொண்ட நாடுகள் தங்கள் மீனவர்களின் மீன்பிடி உரிமையை காத்துக் கொள்ள ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அதுமட்டுமின்றி மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன்பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும்; அவர்களைக் கைதுசெய்யவோ சிறைப்படுத்தவோ கூடாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைப்பிடிக்கவில்லை. இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் இதனைச் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பவில்லை.
முதலில் திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர். அடுத்து தமிழகம் வேறு தமிழ்நாடு வேறு என்றனர். அதன்பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிப்போம். எங்கள் தாய்மொழி தமிழ் மட்டுமல்லாமல் தமிழ்மொழி சார்ந்த எந்த ஒன்றிலும் தலையிட ஒன்றிய அரசுக்கு மட்டுமல்ல ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக இங்கு நியமிக்கப்படுகிற எவருக்கும் எந்தவித உரிமையும் இல்லை. மொழி உரிமையே எங்கள் தமிழ் திருநாட்டின் முதல் உரிமை என்ற எங்கள் கொள்கைப்படி எங்கள் தாய் மொழி காக்கும் எல்லா முயற்சிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் சமரசமின்றி செயல்படும். தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு எதிராக மூன்றாவது மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் கனவு எமது மொழிப்போர்த் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் நிறைவேறாது.
அரசின் வருவாய் பெருக்க எந்த ஓர் அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் மின்கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமையை மட்டுமே அதிகமாக விதித்து மக்களின் பொருளாதார நிலையைக் கேள்விக்குறியாக்கியுள்ள திமுக அரசுக்கு செயற்குழு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச்செயல்கள், சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது. மேலும், தொடரும் கள்ளச்சாராய விற்பனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருட்களின் பழக்கம் போன்ற நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் மக்கள் நலனைக் காட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டுவரும் ஆளும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பொய்களின் பட்டியலாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதன் வாயிலாக ஜனநாயகத்தையும் மக்களையும் ஏமாற்றியதுதான் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.. தேர்தல் வாக்குறுதியை வழக்கம்போல காற்றில் பறக்க விட்டுவிட்டு ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத மின் கட்டண உயர்வை திணித்துள்ளது தமிழக அரசு, இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு மாதந்தோறும் மின்கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு மறுபுறம் மதுக்கடைகளை திறந்து அதன் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கும் மதுக் கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மதுக்கடை மூலம் பெறும் வருவாயைவிட கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்றுத்திட்டங்களைக் கண்டறிந்து திமுக அரசு செயல்படுத்த வேண்டும்.” என்று த.வெ.க. செயற்குழுத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.