போலி அறிவியலைத் திணிக்கும் முயற்சி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

வேத கால மருத்துவம், ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவம் என்று போலி அறிவியலைத் திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்று வரும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் 4ஆவது மாநில மாநாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரை ஆற்றியதாவது:

 “மருத்துவத் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சமூகநீதிக்கு எதிரான சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் எதிர்கொள்கிறோம். இந்தச் சவால்கள் அனைத்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளைச் சிதைப்பதோடு, மருத்துவம் படித்து, டாக்டர்களாகி சமுதாயத்திற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பாழாக்குகிறது.

இந்திய மாநிலங்களில் மிகச்சிறப்பான மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம், தமிழ்நாடு! சென்னை உட்பட்ட பெரு நகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தலைமை மருத்துவமனைகள், நகரங்கள் எல்லாவற்றிலும் அரசு பொது மருத்துவமனைகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து மக்களுக்கும் உரிய நேரத்தில் உடனடி சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை, அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்னரே கலைஞர் உருவாக்கினார்.

இந்தியாவில் கிராமப்புற மக்களுக்கான மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் போதுமான அளவில் இல்லாத சூழலில், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ - குக்கிராமம்வரை சிறப்பான பொது மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதை இந்தத் துறையின் வல்லுநர்கள் பலர் சுட்டிக் காட்டியிருப்பதோடு, தமிழ்நாட்டின் திராவிட மாடலை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தி.மு.க. உச்சநீதிமன்றம்வரை சென்று வாதாடியபோது, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்களான நீங்கள் அனைவரும் ஆதரவாக நின்றீர்கள். அந்தச் சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றோம். அதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் வாழுகிற இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவப் படிப்பை உறுதி செய்தோம்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டமைப்போடு, இந்தியாவின் வேறெந்த மாநிலத்தையும் ஒப்பிடவே முடியாது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, புதுப்பிக்கப்பட்ட வருமுன் காப்போம் திட்டம், விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உட்பட்ட பல திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உலக அளவில் அறிவியல் துறையில் நடக்கும் புதிய ஆராய்ச்சிகளையும் – மருத்துவத் துறையில் ஏற்படும் வளர்ச்சிகளையும் உடனுக்குடன் கவனித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதன் விளைவாகத்தான் பன்னோக்கு மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் சிறப்பான சிகிச்சையை வழங்கி வருகிறோம்.

அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகள், பொதுமக்களைச் சோதனை எலிகளாக மாற்றிடும் அபாயம் கொண்டவை. இந்தியா சோதனை எலியாக மாறிடுமோ என்ற அச்சம் சமூக சமத்துவ மருத்துவர்கள் சங்கத்தைச் சார்ந்த உங்களிடம் இருப்பதை உணருகிறேன்.

ஏனென்றால், மக்களின் உயிர் காத்து, அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்கிற வகையில் Mixopathy (மிக்ஸோபதி), ஒருங்கிணைந்த மருத்துவம், Common Foundation Course, வேதகால மருத்துவம், ஆன்மீக மருத்துவம், சோதிட மருத்துவம் என்று போலி அறிவியலைத் திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு இருப்பதால் அதை எதிர்த்துப் போராட வேண்டிய கடமையுணர்வோடும் இந்த மாநாடு நடந்துகொண்டு இருக்கிறது. மருத்துவர்களான உங்களின் அறிவுப்பூர்வமான – உணர்வுப்பூர்வமான போராட்டத்தில் நாங்கள் துணை நிற்கிறோம்.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில், முதலில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது.

நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்களைக் குறைப்பதற்கும், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கும் ஒன்றிய அரசு தடை விதிக்கும் போக்கையும் எதிர்த்தோம்.

அதுபோலவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ இடங்களுக்கான ஒற்றைச் சாளர முறையிலான மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொள்ளும் எதேச்சாதிகாரப் போக்கை மேற்கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் மாநில உரிமைகளையும், மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஜனநாயக அறப்போர்க் களமாக சமூக சமத்துவ டாக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.

ஆபரேஷன் தியேட்டரில் அறுவைச் சிகிச்சையை முடித்து, நோயாளியின் இதயத்துடிப்பு உட்பட்டவை சீராக இருக்கிறதா என்று ஐ.சி.யூ வார்டில் கண்காணித்து, அதற்குப் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றி, பின்னர் டிஸ்சார்ஜ் செய்வதற்கு எவ்வாறு உங்களுக்கு நேரம் தேவைப்படுகிறதோ – அதுபோல மருத்துவக் கட்டமைப்பையே நோயாளி ஆக்கியவர்களிடம் இருந்து மருத்துவத் துறையையும் நாட்டையும் மீட்டு ஆரோக்கியமாக்குவதற்கு அதிகபட்சமாக இன்னும் 6 மாதம் தேவையாக இருக்கிறது. வெற்றிகரமான சிகிச்சையை நிச்சயமாக இந்திய மக்கள் அளிப்பார்கள்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com