ஓவியர் ட்ராட்ஸ்கி மருது வரைந்த சென்னையின் பல்வேறு இடங்களின் அழகிய கோட்டோவியங்களை அஞ்சல் துறை 25 அஞ்சல் அட்டைகளாக வெளியிட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது. நடிகர் சிவகுமார், கார்ட்டூனிஸ்ட் மதன், ட்ராட்ஸ்கி மருது, சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையின் மெரினா கடற்கரை, எலியட்ஸ் பீச், மெட்ரோ ஸ்டேஷன், ரேஷன்கடை, கலங்கரை விளக்கம் போன்ற பல இடங்கள் மருதுவின் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.
கார்ட்டூனிஸ்ட் மதன் பேசுகையில்,' மருது தன் கோடுகளால் ஓவிய பாணியில் புரட்சிகரமான மாற்றம் கொண்டுவந்தவர். அதை அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும் வைத்தார். அவரைப் போன்ற ஓவியர்களைக் கௌரவிக்கும் அஞ்சல்துறையைப் பாராட்டுகிறேன்' என்றார்.
' நாங்கள் எட்டு ஓவியர்கள் சேர்ந்து மூன்று மாதம் செய்த அனிமேஷன் வேலையை செயற்கை நுண்ணறிவு இப்போது ஏழு நிமிடத்தில் செய்துவிடுகிறது,' என்று தன் வரகலை அனுபவங்கள் பற்றிப் பேசினார். ' நிறைய குப்பையான வரைகலைப் படைப்புகள் இதனால் வரும். ஆனாலும் கற்பனை வளம் கொண்ட இளம் கலைஞர்கள் தங்கள் தனித்திறத்தால் இதை வெல்வார்கள்'என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திரைக்கலைஞர் சிவகுமார் தான் ஓவியம் வரைந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ' சினிமாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆனபின்னரும் ஒரு முறை மும்பைக்கு சென்றிருந்தபோது அங்கே ஒவியங்கள் வரைந்தேன். ஓர் இடத்தை ஸ்பாட் பெயிண்டிங் செய்தபோது காவல்துறை அதிகாரி ஒருவர் அது பாதுகாக்கப்பட்ட ராணுவ இடம். அனுமதி இன்றி வரைந்ததால் கைது செய்யப்போகிறேன் என்று பிடித்துக்கொண்டார். நான் ஓவியக் கல்லூரி மாணவன் என்று சொல்லி முதல் நாள் வரைந்த ஓவியதைக் காண்பித்தேன். அவர் விட்டுவிட்டு, காபி சாப்பிடுகிறாயா எனக் கேட்டார். நான் ஓடிவந்துவிட்டேன்' என்றார். ஓவியங்களை அஞ்சல் அட்டையாக வெளியிடும் முயற்சியைப் பாராட்டினார்.
அஞ்சல்துறை தலைவர் நடராஜன் பேசுகையில் ஏற்கெனவே பெங்களூரு ஒவியர் பெர்ணாண்டஸ், மதுரை ஓவியர் மனோகர் தேவதாஸ் ஆகியோரின் ஓவியங்களை அஞ்சல் அட்டைகளாக வெளியிட்டதை நினைவுகூர்ந்தார்.
விழாவில் ஜி.பாபு, உதவி இயக்குநர்( அஞ்சல்துறை) வரவேற்புரை வழங்கினார். கே. ஹேமலதா, உதவி இயக்குநர், (அஞ்சல்துறை) நன்றியுரை வழங்கினார்.
அஞ்சல்துறை அலுவலர்கள், ஊழியர்கள், அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் திரளாக விழாவில் கலந்துகொண்டனர்.