மொழிபெயர்ப்பாளர் பேரா. செல்லப்பன் சென்னையில் காலமானார்!

prof chellappan
பேரா. க. செல்லப்பன்
Published on

மொழிபெயர்ப்புத் துறை விற்பன்னராக இருந்த பெரும் பேராசிரியர் க. செல்லப்பனார் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. 

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் தலைவராக இருந்த இவர், தமிழிலும் மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்தவராக விளங்கினார். மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகடமி விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அண்மை ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்றுவந்தவர், முதுமையாலும் நோய்மையாலும் இன்று இயற்கை எய்தினார்.  

அன்னாரின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் முதலியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

புலவர் செந்தலை கவுதமன், கோவை சூலூர் பாவேந்தர் பேரவை

”ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைபுலமை வாய்ந்தோராகவும் தமிழ்தாங்கிய மனத்தினராகவும் திகழ்வோரை விரல்விட்டுத்தான் எண்ணமுடியும்.

தேவநேயப் பாவாணர், கா.அப்பாத்துரையார், ம.இலெ.தங்கப்பா வரிசையில் வருபவர் க.செல்லப்பனார். அவர் எழுதியவை குறைவு ; பேசியவை மிகுதி.

ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயன்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியாம் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்.பாவேந்தர் பாரதிதாசனின் ஆணையை வாழ்க்கைப் பாதையாக்கி வாழ்ந்த பெருமகனார் அவர். தோழர் தா.பாண்டியனின் வகுப்புத் தோழர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேட்டுக்குடித் தோரணையின்றி எளிய மனிதராய் வலம்வந்த பேராசிரியர் . எந்தத் துறையிலும் பாதிக்கப்பட்டோருக்காகக் குரல் கொடுப்பதில் முன்னின்றவர்.

கோவையில் 2010இல் நிகழ்ந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இறுதி நாள் இறுதி நிகழ்ச்சியான ஆய்வாளர் நிறைவரங்கத்தில் பேரா.க.செல்லப்பன் அவர்கள் பாவலர் சிற்பி அவர்களின் தலைமையில் கவிஞர் வைரமுத்து முன்னிலையில் ஆற்றிய அரிய சொற்பொழிவு , இன்னும் காதில் சிலையோடிக் கொண்டுள்ளது.

"கவிதை எது ? கவிஞர் யார் ? இன்று மக்கள்கவிஞர் உள்ளார்களா? " அடுத்தடுத்த கேள்விகளை அவரே எழுப்பி விளக்கத்தை அருவியாய்க் கொட்டி ஆய்வரங்கத்தைச் சிலிர்க்க வைத்தார்.

' ஓர்ந்து கண்ணோடது' அவர் எழுப்பிய ஆண்மை முழக்கத்தின் முன், மக்கள் இரண்டக எழுத்தாளர் பலரின் முகங்கள் கிழிந்து தொங்கின.

ஆங்கிலப் பேராசிரியராகவும் தமிழிலக்கியப் பரப்பில் மனந்தோய்ந்தவராகவும் அறிவாண்மை குன்றாதவராகவும் திகழ்ந்த பெருமையே அவரின் அடையாளம்.

உடல்நலப் பாதிப்பால் செயல்பாடு குன்றிய செல்லப்பனார் நிரந்தரமாக விடைபெற்று விட்டார். அவர் இடத்தை நிறைவுசெய்யும் அறிவாண்மையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் சரியான இரங்கலாக இருக்கும்.

ஆங்கிலப் பேராசான் செல்லப்பனார் நினைவு நெடுங்காலத்திற்கு நிற்கும்.”

இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்

”சிவகங்கை மாவட்டம், பாகநேரியை பூர்வீகமாகக் கொண்ட கா. செல்லப்பன், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இண்டர்மீடியட் கல்வி முடித்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக் கல்வி பயின்று “முனைவர்” பட்டம் பெற்றவர்.

இவர் கவியரசர் தாகூரின் ‘கோரா’ புதினத்தை தமிழுக்கு தந்து சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளையும், கலைஞரின் படைப்புகளையும் ஆங்கில உலகத்துக்கு மொழி மாற்றி தந்த பெருமைக்குரியவர்.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். அவரது மேடைப் பேச்சு சிறப்பு பெற்றது.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு ஏராளமான நூல்களை மொழிபெயர்த்து வழங்கியுள்ள பேராசிரியர் செல்லப்பன், மறைந்த தலைவர் தா.பாண்டியனின் கல்லூரி காலத் தோழர். இருவரும் பல நேரங்களில் ஆங்கில இலக்கியம் பற்றி விரிவாக விவாதிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அன்னாரின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல்!”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”ஆங்கிலப் பெரும் பேராசிரியரும் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஒப்பிலக்கியத்தின் திறனாய்வுச் சுடராகவும் நூற்றுக்கணக்கான மாணவச் செல்வங்களுக்கு வழிகாட்டியாகவும் ஆங்கில இலக்கியத் துறையில் மங்காப் புகழ் கொண்டவராகவும் விளங்கிய பேராசிரியர் செல்லப்பன் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்னாரது மறைவு தமிழ், ஆங்கில இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்கி, திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத் துறையின் தனிப் புகழ்த் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் செல்லப்பன் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை பெற்றவர். எண்ணற்ற ஒப்பியல் நூல்களை எழுதியவர், மொழி பெயர்த்தவர். நான்கு தலைமுறைகளை உருவாக்கியவர்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு ஆங்கில கவிஞர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய நாட்டுக் கவிஞர்களை அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும். ஷேக்ஸ்பியரையும் இளங்கோவடிகளையும் ஒப்பியல் செய்து பெரும் படைப்பினைப் படைத்தவராவார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், மீசை முளைத்த வயதில் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிறப்புக்கும், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெரும் சிறப்புக்கும் உரியவராவார்.

இரவீந்திரநாத் தாகூர் நாவலான ‘கோரா’வின் மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர். மேலும் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக 2006-ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருதையும், 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதையும் பெற்றவர்.

இத்தனை சிறப்புகளை ஒருங்கே கொண்டிருந்த மாபெரும் அறிஞரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மாணவர்களுக்கும், அறிவுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.”

logo
Andhimazhai
www.andhimazhai.com