கள்ளச் சாராயத்தை மலிவுவிலை மதுவால் ஒழிக்கமுடியுமா?

கள்ளச்சாராய தயாரிப்பு
கள்ளச்சாராய தயாரிப்பு
Published on

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மது ஒழிப்பு தொடர்பான கோரிக்கைகளும், குடிப்பிரச்னையை முறைப்படுத்த வேண்டும் என்கிற கருத்துகளும் அதிகமாகவே ஒலிக்கின்றன. மதுவிலக்கு சாத்தியமா இல்லையா என மீண்டும் ஒரு பக்கம் விவாதம் நடந்துகொண்டிருக்க, முதலில் கள்ளச்சாராயத்தைத் தடுக்கமுடியுமா, முடியாதா என்பதைப் பேசுங்கள் என்கிற குரலும் கவனம்பெற்றுள்ளது.

ஏனெனில், கள்ளச்சாராயம் காரணமாக 2005 முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் மட்டும் 1,509 பேர் இறந்துள்ளனர் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரம். இதில் தமிழ்நாட்டுக்குத் தான் முதலிடம்.

கடந்த ஆண்டு செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கள்ளச்சாரம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொடுமையைத் தடுக்க வழிகள் இல்லையா? டாஸ்மாக்கில் விற்கப்படும் மலிவான குவார்ட்டர் பாட்டில் மதுவின் தயாரிப்புச் செலவு ரூ.9.79, நடுத்தரமான மதுவகையின் குவார்ட்டர் பாட்டில் தயாரிப்புச் செலவு ரூ.9.97. ஆனால் அரசு மதுக்கடைகளில் சுமார் 180 ரூபாயைத் தாண்டி விற்கிறது. இந்த அளவுக்கு விலைகூடுதலாக விற்கும்போது மலிவாகக் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை மக்கள் நாடுவதாக ஒரு கருத்து உள்ளது. இது பற்றி பேசி எழுதிவரும் பிரபல எழுத்தாளர்களிடம் கேட்டோம்.

பாரதிதம்பி, எழுத்தாளர்
பாரதிதம்பி, எழுத்தாளர்

குடி குடியைக் கெடுக்கும் புத்தகத்தின் ஆசிரியருமான எழுத்தாளர் பாரதிதம்பி:

“கள்ளச்சாராயம் எல்லா காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. தனிநபர் வருமானம் அதிகமாக உள்ள- முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பக்கம் மக்கள் போவதற்கு, இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று, பண்பாட்டு ரீதியாக கள்ளச்சாராயச் சுவைக்கு மக்கள் பழக்கப்பட்டிருக்கலாம். மிகையான போதைக்கு அவர்கள் பழகியிருக்கலாம்.

இரண்டாவது, டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பது.

கள்ளச்சாராயத்தை மட்டுப்படுத்த கலைஞர் கொண்டுவந்த மலிவுவிலை மதுவை மீண்டும் கொண்டுவரலாம். விலைக் குறைப்பு, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றைச் செய்தால் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தலாம். இத்துடன், இதில் போலீஸ் – கள்ளச்சாராய வியாபாரிகள் இடையிலான கூட்டுக் களவாணித்தனத்தை இல்லாமல் ஆக்கவேண்டும்.” என்றார் பாரதிதம்பி.

எஸ்.ஏ. பெருமாள், மூத்த எழுத்தாளர்
எஸ்.ஏ. பெருமாள், மூத்த எழுத்தாளர்

மாநிலமே கள்ளச்சாராயம் தொடர்பாக விவாதித்துக்கொண்டு இருக்கையில், தென்னை, பனை, ஈச்ச மரங்களிலிருந்து கள்ளை இறக்கினால் 30 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்; சாராய வியாபாரிகள் விடுவார்களா? என மூத்த எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள் சமூக ஊடகத்தில் யோசனையை முன்வைக்க, அதிக அளவில் அது வைரல் ஆனது. அவரிடம் இதுகுறித்துப் பேசியபோது, ”ஆதிகாலம் தொட்டே போதை மனித சமூகத்தில் இருந்துவருகிறது. அதனால் போதையை ஒழிக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருட்கள் - கள்ளச்சாராயம் சமூகத்திலிருந்து ஒழியவேண்டும் என்றால், மிகப்பெரிய அறிவார்ந்த சமூகம் உருவானால்தான் முடியும்.” என்றார் எஸ்.ஏ.பி.

பேரா. அ. மார்க்ஸ்
பேரா. அ. மார்க்ஸ்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான குடியின்றி அமையாது நூல் தமிழகத்தில் குடிப்பழக்கம் தொடர்பான பெரும் விவாதத்தை எழுப்பி பரவலான கவனத்தைப் பெற்றது. அந்த நூலில் இடம் பெற்ற கட்டுரையாளர்களில் ஒருவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான பேரா. அ. மார்க்சிடம் பேசினோம்:

“வெளிநாடுகளில் அனைவரும் குடிக்கிறவர்கள்தான். அங்கு இந்த மாதிரி மோசமான நிலைமை இல்லை. இந்தியச் சூழலில்தான் இது பிரச்னையாக உள்ளது.

கள்ளச்சாராயத்தைப் பொறுத்தவரை, அதன் தயாரிப்புச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் பல மடங்கு அதிக வித்தியாசம் இருக்கிறது.

வசதியானவர்கள் டாஸ்மாக் போன்றவற்றில் வாங்கிக் குடித்துவிடுகிறார்கள். ஆனால் சாதாரண மக்கள், விலை குறைவாக உள்ள கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிப்பதனால்தான் பிரச்னை ஏற்படுகிறது.

இரண்டாவதாக, அரசாங்கத்துக்கு கள்ளச்சாராயம் விற்பவர்கள் யாரென்று தெரியும். அரசாங்கம் நினைத்தால் கள்ளச்சாராயத்தை ஒழித்திருக்கலாம். அரசு கண்டுகொள்வதில்லை.

கிராமங்களில் சென்று பாருங்கள், கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரசு நினைத்தால் கள்ளச்சாராயத்தைத் தடைசெய்துவிட முடியும். டாஸ்மாக்கில் வருடம் வருடம் விலை ஏற்றிக் கொண்டிருப்பதால் சாதாரண ஏழை எளிய மக்களால் மதுபானம் வாங்க முடிவதில்லை. அரசு உடனடியாக பொதுவான குழு ஒன்று அமைத்து ஆய்வுசெய்தால் கள்ளச்சாராயம் தொடர்பான பிரச்னைகள் தெரியவரும்.” என்கிறார் மார்க்ஸ்.

logo
Andhimazhai
www.andhimazhai.com