தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டண உயா்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நிகழாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் மக்களவை தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தோ்தல் முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயா்த்தியது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5 சதவீதம் வரை கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.120 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த சுங்க கட்டண உயர்வா சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும். சென்னைக்கு காய்கறி, மளிகை பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக் கூடும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.