தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் (டி.என்.எஸ்.டி.சி.) கீழ் இயங்கும் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்திலிருந்தே புறப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் சென்று கொண்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக, கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையம் தமிழக அரசால் திறந்துவைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுவரை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும், தனியாரின் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், ஜனவரி 30ஆம் தேதி முதல், தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் 710 டி.என்.எஸ்.டி.சி. பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 610 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிழக்கு கடற்கரை சாலை, பூந்தமல்லி வழியாக செல்லும் டி.என்.எஸ்.டி.சி. பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.