எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு இழப்புத் திட்டத்தால் நாடு முழுவதும் பெரும் பதற்றமும் அதிர்ச்சியும் உண்டானது. அந்த நாளையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் மட்டும் பா.ஜ.க. தலைவர்களும், அமைச்சர்களும் இயக்குநர்களாக இருந்த 11 கூட்டுறவு வங்கிகளில் சுமார் 3118 கோடி ரூபாய் அளவிலான பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன; நாடு முழுவதும் கருப்பு பணம் வெள்ளை பணம் ஆவதற்கு மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெருமளவில் உதவி செய்தது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
”கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, புழக்கத்தில் இருந்த ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும். மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்க பேரழிவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடியாகும். கருப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிக்கப்படும் என்றார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி ஒன்றும் நடக்கவில்லை. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 15.44 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளில் 15.31 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் அதாவது, 99.9 சதவிகிதம் வங்கிகளுக்கு திரும்ப வந்து சேர்ந்து விட்டன. அப்படியானால் கள்ளப் பணம் எங்கே ? கருப்பு பணம் எங்கே ? என 8 ஆண்டுகள் கழித்து மோடி ஆட்சியை நோக்கி பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டிய நாள் நவம்பர் 8.” என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
”பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆன செலவு ரூபாய் 12,677 கோடி. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு தான் பயன்பட்டது என்று நாம் கூறவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்தினா ஐதராபாத் கருத்தரங்கில் உரையாற்றும் போது, இந்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் நாட்டு மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் தான் ஏற்பட்டதே தவிர, எந்தப் பலனும் ஏற்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு யாரையும் கலந்து பேசாமல் தன்னிச்சையாக எடுத்ததனால், இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், "“2015-16 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.01 சதவிகிதத்திலிருந்து 2017-18 ஆம் ஆண்டில் 6.5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்தது. 1.6 சதவிகித வீழ்ச்சியினால் ஏற்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பு ரூபாய் 2.25 லட்சம் கோடி.
இதைத் தவிர வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முயன்றவர்களில் 140 பேர் இறந்திருக்கிறார்கள். 35 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் 50 சதவிகிதம் நசிந்து லட்சக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.” என்றும்,
”பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட முதல் 5 நாட்களில், அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் ரூபாய் 745 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டன. இந்த வங்கியின் இயக்குநராக இருந்தவர் பா.ஜ.க. தேசியத் தலைவரான அமித்ஷா. குஜராத்தில் மட்டும் பா.ஜ.க. தலைவர்களும், அமைச்சர்களும் இயக்குநர்களாக இருந்த 11 கூட்டுறவு வங்கிகளில் சுமார் 3118 கோடி ரூபாய் அளவிலான பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் கருப்பு பணம் வெள்ளை பணம் ஆவதற்கு மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெருமளவில் உதவி செய்திருக்கிறது.
எனவே, பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்பு பணமோ, கள்ள பணமோ பயங்கரவாத நடவடிக்கைகளோ குறைந்தபாடில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது வரலாறு காணாத பொருளாதார பேரழிவாகவும், மக்களின் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதலாகவும் தான் அமைந்து விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நவம்பர் 8 ஆம் நாள் மக்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள் குறித்து பிரதமர் மோடி என்றைக்குமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ”என்றும் செல்வப்பெருந்தகையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.