செனட் உறுப்பினராக ஏபிவிபி ஆளா?- காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கோபம்!

Selvaperunthagai, MLA, TNCC president
செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர்
Published on

வகுப்புவாதக் கருத்துகளைப் பரப்பும் ஏ.பி.வி.பி. தென் மண்டலத் தலைவர் சவிதா ராஜேசை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராக ஆளுநர் நியமிப்பதா என காங்கிரஸ் கண்டித்துள்ளது. 

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழக மக்களின் நலன்களுக்கும், கலாச்சார பண்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கின்ற வகையிலும் செயல்பட்டு வருகிறார் என்றும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தபோதிலும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”சமீபத்தில் ஏ.பி.வி.பி. தென் மண்டலத் தலைவர் சவிதா ராஜேஷ் அவர்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராக நியமனம் செய்திருக்கிறார். அனைத்து துறைகளும் காவி மயமாக்கப்பட்டு வருகிற சூழலில், கல்வித்துறையையும் காவி மயமாக்குகிற முயற்சியாக இந்த நியமனத்தை செய்திருக்கிறார்.” என்று சாடியுள்ளார். 

”ஏ.பி.வி.பி. என்பது மாணவர்களிடையே வகுப்புவாத கருத்துகளை பரப்புகிற ஆர்.எஸ்.எஸ். இன் துணை அமைப்பாகும். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள். அதைப்போல ஏ.பி.வி.பி. புகுந்த கல்வி வளாகம் சீரழிந்ததாகத் தான் வரலாறே தவிர, உருப்படியான கல்வி வளர்ச்சி ஏற்பட்டதில்லை.

சவிதா ராஜேசை செனட் உறுப்பினராக, தமிழக ஆளுநர் நியமித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நியமனத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” என்று செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com