தமிழக மீனவர் பலி - பழிக்குப் பழியா?

தமிழக மீனவர்
தமிழக மீனவர்(கோப்புப் படம்)
Published on

இலங்கைக் கடற்படையால் படகால் மோதி தமிழ்நாட்டு மீனவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம், பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து இன்று மாலை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

முன்னதாக, இராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று கடலுக்குச் சென்ற 397 விசைப்படகுகளில் கடலுக்குள் சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் இலங்கையின் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது, அந்நாட்டுக் கடற்படைக் கப்பல் ஒன்று வேகத்தில் வந்து மோதியது. அதில், கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு  மூழ்கியது.

படகில் இருந்த மீனவர்கள் மூக்கையா, மலைச்சாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகியோரில் மலைச்சாமி இறந்துவிட்டார். 

”இலங்கை கடற்படை நடத்தி இருக்கும் இப்படுகொலை கடும் கண்டனத்துக்கு உரியது.” எனக் கூறியுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 

“நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் 23ஆம் நாள் மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர் தங்கள் படகை மோதினர். ஆனால், அதில் சிங்களக் கடற்படைப் படகு கவிழ்ந்ததில் சிங்கள வீரர் ஒருவர் உயிரிழந்தார். சிங்களக் கடற்படை வீரர் விபத்தில் உயிரிழந்தை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக மீனவர்கள் மீது பழி சுமத்தினார். தமிழக மீனவர்களின் படகுகளை மோதி மீனவரை படுகொலை செய்த சிங்கள கடற்கரையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

”சிங்களக் கடற்படைப் படகு கவிழ்ந்ததில் சிங்கள வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தான் தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் அவர்களின் கப்பலை மோதித் தாக்கியுள்ளனர். இதை மத்திய, மாநில அரசுகள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
தமிழக மீனவர்கள் எல்லை மீறி வந்ததாகக் கைதுசெய்து சிறையில் அடைக்கும் கொடுமையைச் செய்துவந்த சிங்களக் கடற்படை, இப்போது மிருகத்தனமாக  தமிழக மீனவர்களின் படகு மீது மோதி மீனவர்களை படுகொலை செய்யும் அளவுக்கு துணிந்திருக்கிறது. இதற்கு காரணமான சிங்களப் படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும்.” என்று பா.ம.க. தலைவர் அன்புமணியும் வைகோவின் கருத்தையொட்டி தன் அறிக்கையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், ”ஒரு மீனவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்; ஒரு மீனவரை காணவில்லை; இதுபோன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளதுடன்,

“உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். காயமடைந்த இரு மீனவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கவும் போதிய மருத்துவ வசதிகளை வழங்கவும் வேண்டும். அவர்களை மிக விரைவில் தமிழ்நாட்டிற்கு அழைத்துவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.    

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com