திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கூட்டு பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் மனநலத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
”சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் மூன்று பேர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள், பெண்கள் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை குற்றங்களில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஈடுபடுவது தமிழகத்தில் அதிகரித்துவருவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் குறிப்பிட்டு கவனப்படுத்தியுள்ளனர்.
மேலும், “குற்றச் செயலில் ஈடுபட்ட 9 பேர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளபோதும், இச்சம்பவத்தை முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது போக்சோ உட்பட்ட உரிய சட்டப்பிரிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், இவ்வழக்கில் குற்றங்களில் ஈடுபட்ட அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் கடுமையான தண்டனைகள் தாமதமின்றி வழங்க நீதிமன்ற நடவடிக்கைகளை வேகப்படுத்திட வேண்டும்.
போக்சோ சட்டப்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவிகள், மனநல ஆலோசனைகள் உட்பட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்.. குழந்தையின் படிப்பு தடைபடாமல் இருப்பதை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.” என்றும் அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.