தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான இரண்டு நாள் ஆலோசனை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது நமது முதல் இலக்கு அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது. கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பொய்ச் செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் உள்நோக்கத்தோடு சிலர் அமைதியைக் கெடுக்க செயல்படுவர்; அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். சாலை விபத்துகளால் அதிக மரணம் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வேதனையளிக்கிறது.
சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்புத் திட்டம் ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும். சமூக ஊடகங்களை மாவட்ட ஆட்சியர்கள். காவல் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து கண்காணித்து பொய் செய்திகளை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.