‘இந்தி மீது வெறுப்பு இல்லை... திணிப்பை தான் எதிர்க்கிறோம்!’ – கேரளாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

Deputy CM Udhayanidhi Stalin
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலி
Published on

பா.ஜ.க.வின் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவின் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்திய கலை, இலக்கிய திருவிழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் இருந்து வெளியே இருக்கிறேன். ஆனால், சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வு தான் இருக்கிறது. திராவிடம் என்பது தமிழக கலாச்சாரத்தின் பெருமை. தமிழகமும், கேரளாவும் நீண்ட ஆண்டுகளாக இணைந்து பயணிக்கின்றன.

1924இல் பெரியார் கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி பெற்றார். அதேபோல, கேரளாவில் பிறந்த டி.எம் நாயர், தமிழகத்தில் நீதிக்கட்சி தொடங்குவதற்கு முக்கியமானவர். தென்னிந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கியவர். இது தமிழகத்தில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவில் தமிழகமும், கேரளாவும் தான் அதிக முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலங்களாகும். பாசிசத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. தமிழக, கேரள மக்கள் பாசிச கொள்கையை எதிர்ப்பது ஏன் என்றால், இந்த இரு மாநிலங்களிலும் முற்போக்கு சிந்தனை பரந்து விரிந்துள்ளது.

இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கக் காரணமே திராவிட இயக்கம் தான். இந்தி மீது வெறுப்பு இல்லை. திணிப்பை தான் எதிர்க்கிறோம். பா.ஜ.கவின் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும்.” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com