“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.” என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு கொடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5ஆம் நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முந்தைய தினங்களை போலவே அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர்.
அதற்கு, கேள்வி நேரத்துக்கு பிறகு பேச அனுமதிப்பதாகவும், அதற்கான நேரம் வழங்குவதாகவும் சட்டப்பேரவை தலைவர் தெரிவித்தபோதும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி முதலில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுத்தி கொண்டிருந்தார்.
சட்டப்பேரவையில் தொடர்ந்து அ.தி.மு.க. அமளியில் ஈடுபட்டு வருவதால் நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க.வுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க.வுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், அ.தி.மு.க.வின் பேச்சுக்கள், அமளி உள்ளிட்டவை அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டவாறு அ.தி.மு.க.வினர் அவையில் இருந்து வெளியேறினர்.
பிறகு, பேரவையிலிருந்து புறப்பட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய மரணங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ஆளுங்கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்திருக்க முடியாது. ஒரு நபர் ஆணையம் அமைத்தாலும், அதன்மீது மக்கள் மத்தியில் பெரிதாக நம்பகத்தன்மை ஏற்படவில்லை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலகங்களுக்கு அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் கள்ளச்சாராயம் தொடர்பாக இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என தமிழக பா.ஜ.க. நேற்று ஆளுநரை நேரில் சந்தித்து மனு கொடுத்த நிலையில், இன்று அ.தி.மு.க. மனு கொடுத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.