’ஜாபர் சாதிக் மாதிரி தி.மு.க.வில் நிறைய பேர் உள்ளனர்’

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளார் ஜெயக்குமார்
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளார் ஜெயக்குமார்
Published on

ஜாபர் சாதிக் மாதிரி தி.மு.க.வில் நிறைய பேர் உள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

“தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஏறக்குறை மூன்று வருடங்களில் ஒரே ஒரு சாதனை செய்திருக்கிறது. சென்னையை போதைத் தலைநகரமாக மாற்றியுள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேடு, ஊழல் போன்றவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் போதைத் தலைநகரமாக தமிழகம் உள்ளது. போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது தி.மு.க. அரசு. மதுவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும் தி.மு.க. தான். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக்கை இன்னும் பிடிக்க தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாபர் சாதிக் மாதிரி இன்று தி.மு.க.வில் நிறைய பேர் உள்ளனர்.

பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. இந்த மண் திராவிட மண். மோடியின் வருகையால் பா.ஜ.க.வுக்கும் பலன் இருக்காது. தமிழக மக்களுக்கும் பலன் இருக்காது. வடக்கே இருக்கிற கட்சிகளுக்கு தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்காது. காங்கிரஸுக்கு கணிசமான வாக்குகள் இருந்தாலும் ஆட்சியமைக்க முடியாது. தமிழகம் அவர்களை ஏற்றுக்கொள்ளாது. யார் வந்தாலும் அது வீணான முயற்சிதான்.” என்று ஜெயக்குமார் பேசினார்.

அப்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு வி.சி.க. வந்தால் ஏற்றுக்கொள்வது பற்றி பேசிய ஜெயக்குமார், “தி.மு.க. கூட்டணியில் இழுபறி உள்ளது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். வந்தால் அவர்களுக்குத்தான் லாபம். அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் கூடுதல் இடம் கிடைக்கும். நாங்கள் யாரிடமும் கூட்டணிக்காக நிற்கவில்லை. தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி இருந்தால் அ.தி.மு.க.வுக்கு வரலாம்.” என்றும் ஜெயக்குமார் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com