அமலாக்கத்துறை சோதனையைக் கண்டு அஞ்சவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி
Published on

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தொடர்புடைய வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் ‘பாஜகவுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை’ என தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் 2006 - 2011 வரையிலான காலத்தில் செம்மண் குவாரியில்அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28 கோடியளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி, கட்சி நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன் ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கில் தங்களை விடுவிக்கக் கோரி கெளதம சிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் கடந்த ஒரு மாதம் முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஏதும் நடைபெற்றிருக்கிறதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

சென்னை உள்பட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதேபோல அவரது மகன் கெளதம சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பாஜகவுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை. பொன்முடி அதை சட்டப்படி எதிர்கொள்வார். சோதனையைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை’ என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com