”மாற்றுத்திறனாளி ஸ்கூட்டரை 4வீலர் எனக்கூறி மகளிர் தொகை மறுப்பு: அமைச்சர் உதயநிதியிடம் முறையீடு!

அமைச்சர் உதயநிதியிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர்
அமைச்சர் உதயநிதியிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர்
Published on

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட 2 சக்கர வாகனத்தையும் 4 சக்கர வாகனமெனக் கூறி, மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது என புகார்கள் எழுந்துள்ளன.

மகளிர் உரிமைத்தொகை இன்னமும் சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது குறித்து கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாற்றித்திறனாளிகள் அமைப்பின் சார்பில் மனு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் - பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி, துணைத்தலைவர் பா.சு. பாரதி அண்ணா ஆகியோர் நேற்று மாலையில் சந்தித்து பாதிப்பு விவரத்தை எடுத்துக் கூறினர்.

அப்போது, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறுவதை காரணம் காட்டி மாற்றுத்திறன் குடும்பத்தலைவிகளுக்கு மறுப்பதும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வாகனத்தில் 4 சக்கரங்கள் இருப்பதை வைத்து, கார் போன்ற 4 சக்கர வாகனம் உள்ளதைப்போல காரணம்காட்டி மறுப்பது பற்றியும் அவர்கள் அமைச்சரிடம் விளக்கிக்கூறினர்.

முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுசென்று, அனைத்து மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com