குடியுரிமைத் திருத்தச் சட்டம் - சிஏஏவுக்கு பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் வரவேற்புத் தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க. தொடக்கம் முதலே இதை எதிர்த்துவருகிறது. சட்டப்பேரவையிலும் இதுகுறித்து தீர்மானம் இயற்றியுள்ளது.
இச்சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த அ.தி.மு.க. இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அம்லபடுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.
இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது.அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைத்து விடும் - வைகோ
மோடி தலைமையில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும், காஷ்மீர் சிறப்பு உரிமைப் பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு. குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிரமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது .
1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் இந்திய நாட்டில் பிறந்த அனைவரும் இந்தியக் குடியுரிமை பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
பிரிவினையின்போதும், அதன் பின்னரும் குடிபெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதற்கும்கூட மதம் வரையறையாக வைக்கப்படவில்லை.
அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்களை வெளியேற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, “இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்” எனக் குடியுரிமைச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டு, 1987-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
2004-ல் இந்த நிபந்தனை மேலும் கடுமையாக்கப்பட்டது. குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதோடு, மற்றவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது என அச்சட்டம் திருத்தப்பட்டது.
இந்தத் திருத்தம் இந்தியாவில் குடியேறியிருக்கும் வங்கதேச முசுலிம்களையும், அவர்களது வாரிசுகளையும் ஒதுக்கி, சட்டவிரோத ஊடுருவல் பேர்வழிகளாகக் காட்டும் உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது.
மோடியின் ஆட்சியில் தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தமோ, மிகவும் வெளிப்படையாகவே இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முசுலிம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குகிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி, டிசம்பர் 31, 2014 முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதக் கூடாது. மேலும், அவர்கள் மீது கடவுச்சீட்டுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” எனக் குறிப்பிடுகிறது, அத்திருத்தம்.
பாகிஸ்தானில் இந்துக்களைவிட, அஹமதியா முசுலீம்கள்தான் கொடூரமான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் மதச் சிறுபான்மையினர். பர்மிய இராணுவம் ரோஹிங்யா முசுலிம்கள் மீது இனப் படுகொலை நடத்தியிருப்பது உலகெங்கிலுமே அம்பலமாகியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் இனப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுக் கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தம் யூதர்களுக்கு இசுரேல் போல, இந்துக்களுக்கு இந்தியா என்பதை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, இச்சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகள், வரம்புகளை எதிர்காலத்தில் மாற்றும் அதிகாரத்தையும் மைய அரசிற்கு அளித்தே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்துக்கள் அல்லாதவர்கள், எந்தவொரு உரிமையினையும் சலுகையினையும் கோராமல், இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்து இந்த நாட்டில் வாழலாம்” என ஆர்.எஸ்.எஸ்.- சித்தாந்த குரு கோல்வால்கர் கூறியிருப்பதற்கு ஏற்ப, இந்து இந்தியாவை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்.- இறுதி நோக்கம். அதனை நோக்கிச் செல்லும் திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடிதான் குடியுரிமைத் திருத்தச் சட்டத் திருத்தம் ஆகும்.
மோடி ஆட்சியில் தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தமோ, மிகவும் வெளிப்படையாகவே இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முசுலிம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குகிறது.
2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மக்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது.
மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமானது.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளால் தங்களது உரிமைகள் பறிபோகும் என வடகிழக்கு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த கூடாது என்று திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு இஸ்லாமிய பெருமக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் தீவிரப் போராட்டத்தில் இறங்கினர்.
இலட்சக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் தங்கள் எதிர்காலம் குறித்த கவலையோடு வீதியில் இறங்கி போராடினார்கள்.
இதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவதை ஒத்திவைத்த பாஜக அரசு மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளிவருகிற சூழலில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ,நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலும் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிற்போக்கு இந்துத்துவ பாசிச பாஜக அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றே ஜனநாயக சக்திகளின் இன்றியமையாத கடமையாகும்.
மக்களின் குடியுரிமையை பறிக்கும் விதிகள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை ஒன்றிய அரசு அண்மையில் அறிவிக்கை செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டமானது, மதச்சார்பின்மை என்கிற அரசமைப்பு சட்ட விழுமியத்துக்கு முரணாக, குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இஸ்லாமியர்களின் குடியுரிமையை இச்சட்டம் பாகுபடுத்துகிறது. நாடாளுமன்றம் பின்பற்ற வேண்டிய அரசமைப்பு சட்டத்தை, நாடாளுமன்றத்தை வைத்தே மீறுவது பாஜகவுக்குக் கைவந்த கலையாக உள்ளது.
2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதாகும். மோடிஅரசின் அனைத்து பம்மாத்து முயற்சிகளும் எடுபடாமல் தவிடுபொடியாகியுள்ள நிலையில் தற்போது கடைசி ஆயுதமாக இச்சட்டத்திற்கான விதிமுறைகளை அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
2019ல் சட்டம் வந்த போது இந்தியா முழுவதும் ஷாஹின்பாக் உள்ளிட்ட எதிர்ப்பு இயக்கங்கள் வெடித்தன. சிபிஐ (எம்) மற்றும் இதர அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. எதிர்ப்பின் காரணமாகக் கிடப்பில் போட்டு வைத்த சட்டத்தை 2024 தேர்தல் நெருங்கும் போது, பாஜக மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கமே இதில் மேலோங்கி நிற்கிறது. மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்ற சூழல், இந்திய குடிமக்களாக ஏற்கனவே உள்ளவர்களில் எந்தப் பகுதியினரின் குடியுரிமைக்கும் எந்நேரம் வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே, 9 மாநிலங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாங்கள் பராமரிக்க மாட்டோம் எனக் குரல் கொடுத்தன. தற்போது விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பின்னணியில், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் அதனை அமல்படுத்துவதற்கு உறுதியான மறுப்பைத் தெரிவித்துள்ளன. ஒன்றிய அரசு தந்திரமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டு பதிவு மற்றும் பராமரிப்பு பணியில் மாநில அரசாங்கத்துக்கு இடமளிக்காத விதத்தில் விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.
இஸ்லாம் என்கிற அமைதியான மதத்துக்கு, துன்புறுத்தும் மதம் என உலக அளவில் பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இச்சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம் என ஒன்றிய பாஜக அரசு உள்துறை அமைச்சகம் கூறி இருப்பது, ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத்’ தான் தெரிகிறது.
இது ஒன்றிய அரசின் வரலாற்றுப் பிழை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது நகைப்பிற்குரியது. குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோது அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அதனை ஆதரித்தன. மாநிலங்களவையில் அதிமுக 11, பாமக 1 வாக்குகள் எதிர்த்து விழுந்திருந்தால் சட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியாது. இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது.
இந்த கொடூரமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கண்டனக்குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.
- கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்
உணர்வுகளை தூண்டி ஆதாயம் தேடும் முயற்சி - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
கடந்த 2014 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, துன்புறுத்தலால் வெளியேறி, இங்கு வந்து வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பார்சிகள், புத்திஸ்டுகள் மற்றும் கிருஸ்துவர்கள் ஆகியோருக்கு மட்டுமே குடிமக்கள் உரிமை அளிப்பது என்றும். துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்த முஸ்லிம்கள் குடியுரிமை பெற உரிமை இல்லை என்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம் 2019- இந்தச் சட்டத் திருத்தம் வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபில் நின்று, வழிவழியாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் மக்களை பிளவுபடுத்தும். குறிப்பிட்ட ஒரு சிறுபான்மை இன மக்கள் மீது வெறுப்பும், பகையும் வளர்க்கும் பேரழிவு ஏற்படுத்தும் என்பதால் சட்ட திருத்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்த்தெழுந்து போராடியதை மறந்து விட முடியாது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கத்திற்கு வந்ததாக அறிவிக்கை செய்திருப்பது வேலை வாய்ப்பு, விலைவாசி உயர்வு, வரிச்சுமை, வேலையிழப்பு, கடன் சுமை, சாதிய அடக்குமுறைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் போன்ற வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பி, மத உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகும். பாஜக ஒன்றிய அரசின் வன்மமும், வெறுப்பும் நிறைந்த, சமூக நல்லிணக்கத்தை, நிலை குலைக்கும் குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிக்கை வெளியிட்டதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், குடியுரிமை திருத்தம் தொடர்பான அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
- இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர்
தமிழ்நாடெங்கிலும் மார்ச்- 15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான விதிகளை வெளியிட்டு அதை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. முஸ்லிம் வெறுப்பின் அடிப்படையிலேயே இந்தப் பொதுத் தேர்தலைச் சந்திக்க பாஜக திட்டமிட்டு இருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு முழுவதும் மார்ச் -15 ஆம் நாள் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.
‘குடியுரிமை திருத்தச் சட்டம் அண்டை நாடுகளில் இருந்து தஞ்சம் புகுந்துள்ள அகதிகளுக்கு விரைவாகக் குடியுரிமை வழங்குவதற்காகத்தான் கொண்டுவரப்படுகிறது’ என பாஜக அரசு கூறுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும், எந்தெந்த நாடுகளிலிருந்து வந்த அகதிகளுக்குக் குடியுரிமை பெறத் தகுதி இருக்கிறது என்று இந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்தால் முஸ்லிம்களைக் குறி வைத்துதான் இந்த சட்டம் இயற்றப்பட்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. குடியுரிமை வழங்கும்போது குறிப்பிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அதை வழங்குவோம் என பாஜக அரசு கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானதாகும். மதச்சார்பின்மை என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தின் அங்கமாக உள்ளது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தில் எந்தவொரு திருத்தத்தையும் செய்யமுடியாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகளில் முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினருக்குக் குடியுரிமை வழங்க இந்த திருத்தச் சட்டம் வகை செய்கிறது. வேண்டுமென்றே இலங்கை இந்தப் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது. இந்த அப்பட்டமான பாகுபாட்டை ஐநா மனித உரிமைக் கவுன்சிலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டித்துள்ளனர். இது மதரீதியான வன்முறைக்கு வழிகோலும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை தருவதற்குத்தானே தவிர பறிப்பதற்கு அல்ல’ என உள்துறை அமைச்சர் கூறி வருகிறார். அது பச்சைப் பொய்யாகும். இந்த சட்டத்தோடு தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைத் ( NPR) தயாரிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென ஏற்கனவே மோடி அரசு அறிவித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளும்போது ஒருவரது குடியுரிமை தொடர்பான ஐயம் கணக்கெடுப்பு செய்யும் அலுவலருக்கு ஏற்பட்டால் அவரை சந்தேகத்துக்குரிய நபர் என்று அவர் குறிக்க வேண்டும். அதன் பின்னர் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஒருவரை சந்தேகத்துக்குரிய குடிமகன் என்று எதன் அடிப்படையில் தீர்மானிப்பது என்பதைப் பற்றி அந்த விதிகளில் எதுவும் கூறப்படவில்லை கணக்கெடுப்பு செய்யும் அலுவலருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்பவர், எவரை வேண்டுமானாலும் சந்தேகத்துக்குரிய நபர் என்று அறிவித்துவிட முடியும். அப்படி அறிவிக்கப்பட்டவர் தனது குடியுரிமையை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு அவர் நிரூபிக்கவில்லையென்றால் அவர் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்படுவார். அதுதான் இப்போது அசாமில் நடந்திருக்கிறது.
அசாமில்தான் முதலில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கப்பட்டது. அதன் முடிவில் சுமார் 19 லட்சம் பேர் அங்கு குடியுரிமை அற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள்கூட குடியுரிமை அற்றவர்களாக அங்கு ஆக்கப்பட்டனர். குடியுரிமை கிடைக்காதவர்களை அடைத்து வைப்பதற்காக நாடுமுழுவதும் சிறைச்சாலைகள் கட்டுமாறு 2014 ஆம் ஆண்டிலிருந்து மூன்று முறை மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே அசாமில் பல தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமானவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் சரியான உணவு, மருத்துவம் முதலான வசதிகள் இன்மையால் ஒவ்வொரு நாளும் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதே நிலை நாடு முழுவதும் உருவாகும். கோடிக்கணக்கானவர்கள் குடியுரிமை இல்லாதவர்களாக்கப்படுவார்கள். அதுதான் பாஜகவின் திட்டம்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்அகதிகள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.1983 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழினத்துக்கெதிரான வன்முறையால் இங்கே வந்தவர்கள்; ஆயுதப் போராட்டம் நடந்த நேரத்தில் வந்தவர்கள்; முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது உயிர் தப்பி வந்தவர்கள்.. என இங்கே வந்த ஈழத் தமிழர்கள் முகாம்கள் என்ற பெயரில் எந்தவித வசதியுமில்லாத இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணிலே இருக்கிறவர்கள் உள்ளனர்; இங்கே வந்ததற்குப் பிறகு பிறந்த குழந்தைகள் பெரியவர்களாக ஆகி விட்டார்கள். நீண்ட நெடுங்காலமாக இங்கே அவர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை அளிக்க வலியுறுத்திப் பல்வேறு தீர்மானங்களை விசிக உட்படத் தமிழ் நாட்டில் இருக்கிற அரசியல் கட்சிகள் நிறைவேற்றி இருக்கின்றன. ஆனால் எந்த நடவடிக்கையையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. இந்த சட்டத்திலும் இலங்கை நாட்டைக் கணக்கில் கொள்ளவே இல்லை.
இந்த சட்டம் மத ரீதியில் முஸ்லிம்களையும், இன ரீதியில் ஈழத் தமிழர்களையும் தவிர்க்கிறது. இதைத் தொடர்ந்து பாஜக அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கை இந்திய குடிமக்களாக இருக்கின்ற கோடிக்கணக்கான குடி மக்களின் குடியுரிமையைப் பறிக்கப் போகிறது.
பாஜக அரசின் இந்தப் பிளவுவாத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும். பாசிச பாஜக அரசின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்க அனைத்து சனநாயக சக்திகளும் முன்வர வேண்டுமென அழைக்கிறோம்!
- தொல். திருமாவளவன், நிறுவனர் - தலைவர்
ஜனநாயகத்துக்கும், மதசார்பின்மைக்கும் விரோதமானது- தமிழக வாழ்வுரிமைக் கட்சி
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக ஒன்றிய அரசு (11.03.2024) அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
ஆனால், இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் இசுலாமியர்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குவது வெளிப்படையாகவே தெரிகிறது. ஒன்றிய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு, ஜனநாயகத்துக்கும், மதசார்பின்மைக்கும் எதிரானது. மதச்சார்பின்மை எனும் இந்தியா ஒன்றியத்தின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும்.
இந்திய அரசமைப்பு மதத்தைப் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது. ஆனால், இது மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம்.
பாகிஸ்தானில் இந்துக்களை விட, அகமதியா இஸ்லாமியர்கள் தான் கொடூரமான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் மதச் சிறுபான்மையினர். பர்மிய இராணுவம் ரோஹிங்யா இசுலாமியர்கள் மீது இனப் படுகொலை நடத்தியிருப்பது உலகெங்கிலுமே அம்பலமாகியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் இனப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தம் யூதர்களுக்கு இசுரேல் போல, இந்துக்களுக்கு இந்தியா என்பதை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, இச்சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகள், வரம்புகளை எதிர்காலத்தில் மாற்றும் அதிகாரத்தையும் மைய அரசிற்கு அளித்தே இச்சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
“இந்துக்கள் அல்லாதவர்கள், எந்தவொரு உரிமையினையும் சலுகையினையும் கோராமல், இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்து இந்த நாட்டில் வாழலாம்” என ஆர்.எஸ்.எஸ்.- சித்தாந்த குரு கோல்வால்கர் கூறியிருப்பதற்கு ஏற்ப, இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது பாசிச பாஜக அரசு.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக 2020 ஆம் ஆண்டில் மாபெரும் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றது. அப்போது, இசுலாமியர்களை மட்டும் தனிமைப்படுத்தி ஒடுக்குமுறைகளை செலுத்த முயற்சிக்கிறது பாசிச மோடி அரசு என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், ஜனநாயக சக்திகள் எழுப்பிய கண்டனக்குரல்களை புறந்தள்ளி இருக்கிறது மோடி அரசு.
எனவே, பாசிச பாஜக குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களை ஒடுக்குவதில் தீவிரமாக செயல்படுகிறது. இதனை முறியடிக்க வேண்டிய பொறுப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் உள்ளது.
அதே நேரத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற, நாடு முழுவதும் ஒருமித்த கருத்துள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட, தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும்- நாம் தமிழர் கட்சி
இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்தும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக பாஜக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வேற்றுமையில் ஒற்றுமை எனும் பன்முகத்தன்மை கோட்பாட்டின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்தியப் பெருநாட்டை மதரீதியாகப் பிரித்து துண்டாடவே பாஜக அரசின் இக்கொடுஞ்செயல் வழிவகுக்கும். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்து குடியேறிய இசுலாமியர் அல்லாதோர்க்குக் மட்டும் குடியுரிமை வழங்குவதற்கு கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. மதப்பாகுபாட்டை மக்களிடையே ஏற்படுத்தி இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தும் உள்நோக்கம் கொண்ட அத்திருத்தச்சட்டத்தை எதிர்த்து பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது. 1955ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய அத்திருத்தச்சட்டம் வழிதிறந்துவிடுகிறது. இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்தச்சட்டம் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும். இசுலாமிய நாடுகளிலிருந்து வெளியேறும் இசுலாமியர் அல்லாதோர்க்குக் குடியுரிமை வழங்கும் பாஜக அரசு, பெளத்த மதப்பயங்கரவாத நாடான இலங்கையிலிருந்து இன ஒதுக்கலுக்கு ஆளாக்கப்பட்டு, போரின் விளைவாக வெளியேறும் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கவும் மறுக்கிறது. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்நிலத்தில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்கள் இன்றும் அகதிகளாகவே தொடரவே இச்சட்டம் வலியுறுத்துகிறது. ஈழச்சொந்தங்களை இப்பட்டியலில் புறக்கணித்ததன் மூலம், தமிழர்களை இந்துக்கள் எனப் பொய்யுரைத்து வாக்குவேட்டையாட முயலும் பாஜக போன்ற இந்துத்துவ இயக்கங்களுக்கு எதிராக நாங்கள் முன்வைத்த, ‘தமிழர்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்லர்’ எனும் முழக்கம் மெய்ப்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, ஈழத்தமிழர்களை புறக்கணித்தும், இசுலாமிய மக்களைப் பிரித்து தனிமைப்படுத்தி நாடற்றவர்களாக மாற்ற முனையும் குறிக்கோளோடும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை, தேசிய இனங்களின் உரிமைக்கு பாடுபடும் அனைத்து மாநிலக் கட்சிகளும் உறுதியாக எதிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டினை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் இத்திருத்தச்சட்டத்தை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், கேரள மாநில அரசினைப்போல, மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் இக்கொடுந்திருத்தச்சட்டத்தை எக்காரணம்கொண்டும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்கக்கூடாதென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன். -
- செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்