தமிழக மக்களே உஷார்… வீசப்போகிறது வெப்ப அலை!

கோடை வெயில்
கோடை வெயில்
Published on

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக இயல்பை அதிக வெயில் சுட்டெரிப்பதால் வெப்ப அலை வீசுகிறது. இதனால் பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த நாட்களில் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது வடதமிழக உள்மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை அதிகமாக வீசக்கூடும் எனவும், அதன் பின்னர் உள்மாவட்டங்களில் 5ஆம் தேதிக்கு பிறகு கோடை மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com