அமெரிக்காவின் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ. நிறுவனம் ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்ய, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை புறப்பட்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகின்றன.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்காவின் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ.நிறுவனம் ஒசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்கிறது. ஓசூரில் மேம்பட்ட மின்னணு, டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைக்க உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை ஆர்.ஜி.பி.எஸ்.ஐ.நிறுவனம் வழங்குகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட முதல்வர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள்கள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ‘குட் பை’ அமெரிக்கா என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சிகாகோ விமான நிலையத்தில் கூடிய அமெரிக்க வாழ் தமிழர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி, அவரை வழியனுப்பி வைத்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தரும் விமானம் நாளை காலை 8.30 மணியளவில் சென்னை வந்தடையும். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விளக்கத்தை முதலமைச்சர் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.