அட... குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் தமிழ் எழுத்தாளரா?

எழுத்தாளர் சாலமன்
எழுத்தாளர் சாலமன்
Published on

அரசியல் செயல்பாடு, களப்பணி மூலம் நன்கு அறியப்பட்டவர் சாலமன். ‘வசந்தத்தைத் தேடி’ என்ற நாவலின் மூலம் எழுத்துலகில் கால்பதித்தார். தற்போது அவர் மீது தமிழக அரசு குண்டர் சட்டம் போட்டிருக்கிறது.

இது தொடர்பாக அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சாக்கடையாகக் காட்சியளிக்கும் கூவம் ஆறு, அதன் தலைமடியான திருவள்ளூர் நரசிங்கபுரம் கிராமத்தில் தெளிந்த பளிங்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு தென் கொரிய நிறுவனமான ஊசு-வின் (Woosu Automotive India Private Limited) தனது தொழிற்சாலை உள்ளது.

”ஊசு நிறுவனத்தின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து கிட்டத்தட்ட 7,500 மெட்ரிக் டன் ஆற்று மணல் எடுக்கப்பட்டது. இதை கழிவு என்ற பெயரில், மணல் மாஃபியாக்களின் துணை கொண்டு, தமிழ்நாடு அரசின் உதவியுடன், போலீஸ் பாதுகாப்போடு, கிராம சபைத் தீர்மானங்களையும் மீறி, கடந்த 13.07.2023 அன்று கடத்திச் செல்ல முயன்றனர். இதனை எதிர்த்து கிராம மக்களை அணி திரட்டி, ஊசுவுக்கு எதிராக நின்றார் சாலமன்.

இதனால், சாலமனுக்கு எதிராக அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் அருண் காவல்துறையில் புகாரளித்தார். “கத்தி காட்டி எனக்கு கட்டிங் கொடுக்காம மணலை விக்கக் கூடாது” என மிரட்டியதாக சாலமன் மீது பொய் குற்றச்சாட்டு கூறினார். இதன் அடிப்படையில் சாலமன் உள்ளிட்ட கிராமவாசிகள் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் நீங்கலாக மற்ற அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலமன் மீது பதியப்பட்டுள்ள வழக்கு குறித்து அவருடைய வழக்கறிஞர் சந்தோஷிடம் பேசினோம், “ஜூலை 13ஆம் தேதி சாலமனுடன் சேர்த்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். அன்றே ஒருவர் உடல்நிலை குறைவால் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் 18ஆம் தேதி 9 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சாலமனை மட்டும் விடுவிக்கவில்லை.

13ஆம் தேதி இரவே சாலமன் மீது 147, 148, 294B, 384, 50(26) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவருக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தோம். அதை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றமும், மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை-30) இரவு சாலமன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்” என்றார்.

”கடந்த ஆண்டு முன்னுரை எழுதுவதற்காக அல்லது படித்து பார்த்து சொல்வதற்காக நான்கு நாவல்கள் எனக்கு வந்தது.

அப்படி வந்த நாவல்களில் ஒன்றுதான் #வசந்தத்தை_தேடி சாலமன் என்பவர் எழுதியிருந்தார் அவரை எனக்கு முன்பின் அறிமுகம் கிடையாது அவருக்கு பழக்கமான அதே நேரம் எனக்கு அறிமுகமான ஒரு #வழக்கறிஞர் தந்ததின் பேரில் வாசித்துப் பார்த்ததில் எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ..

என்னிடம் இந்த நாவலை தந்து முன்னுரை எழுத சொன்ன நண்பரிடம் அந்த எழுத்தாளரின் எண் கொடுங்கள் அவரோடு நான் பேச வேண்டும் என்று கேட்டபோது, அவர் இப்போது #சிறையில் இருக்கிறார் என்று நண்பர் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

காரணம் அந்த நாவலில் வருவது போன்று நிலம் சார்ந்தும், தொழிலாளர் சார்ந்தும், நடத்திய போராட்டத்தில் விளைவாக சிறைக்கு சென்று இருக்கிறார். .. ஏறக்குறைய அந்த நாவலும் அதை ஒட்டியதாகவே இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஏனெனில் வாழ்வதையே எழுத்தாகவும் மாற்றுகிற ஒரு போராளியாக எனக்கு சாலமன் தெரிந்தார்.

இப்போதும் கூட மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டு குண்டாசில் அடைக்கப்பட்ட உள்ளதாக கேள்விப் படுகிறேன்.

ஆனால் இந்த சமூகத்துக்காக மக்களுக்காக போராடுகிற சாலமன் போன்ற போராளிகளை மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசும் ஒடுக்கவே செய்கிறது. எழுத்தாளர் சமூக போராளி சாலமன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அவர் மீது புனையப்பட்டுள்ள பொய்யான வழக்குகள் திரும்ப பெற வேண்டும்,’ என நாவலாசிரியர் கரன் கார்க்கி தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com