தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பது நியாயமா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் இரண்டு நாள் பயணமாக கோவை சென்றார். அவர் பங்கேற்ற இரு அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்த்தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே. அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் பாடியவர்களின் குறையில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள். உங்கள் அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே, இந்தக் குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்.
குறை இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டுமே தவிர. தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையே தவிர்ப்பது நியாயமா? பாடியதில் குறை கண்ட நீங்கள் பாடாமல் விடுவதே குறை என்று எண்ணவில்லையா? குறையோடு பாடுவது அநீதி... அதற்காக....பாடாமல் இருப்பது நீதியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.