பா.ஜ.க. மாநில பட்டியல் சமூகத்தினர் பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இன்று அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்த பெரியசாமி, அக்கட்சியிலிருந்து விலகி தனியாக செயல்பட்டுவந்தார்.
மறைந்த காஞ்சிபுரம் மடாதிபதி ஜெயேந்திரருக்கு அணுக்கமான இவர், பா.ஜ.க.வில் சேர்ந்தார். அக்கட்சியின் மாநில நிர்வாகி அளவுக்குப் பதவியைப் பெற்ற பெரியசாமி, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வி.சி.க. தலைவர் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் மீண்டும் திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிடத் தயாராக இருந்தார். ஆனால், பா.ஜ.க. தலைமையோ வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினியை வேட்பாளராக நிறுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெரியசாமி, இன்று காலையில் சென்னையில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரபூர்வ இல்லத்தில் அவரைச் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.