நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்! - கே.எஸ். அழகிரி காட்டம்!

கே எஸ் அழகிரி
கே எஸ் அழகிரி
Published on

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையிலிருந்து 92 எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து இருவர் உள்ளே குதித்து வண்ணக் குப்பியை வெடிக்கச் செய்ததன் மூலம் உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் மக்களவை உறுப்பினர்கள் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 13 பேரை ஏற்கனவே இடைநீக்கம் செய்தார்.

இதையடுத்து இன்றைக்கு அதே பிரச்னையை எழுப்பியதற்காக 33 மக்களவை உறுப்பினர்களும், 34 மாநிலங்களவை உறுப்பினர்களும், உரிமைக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட 11 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 93 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்த கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இதில் திமுக - காங்கிரஸ் உள்ளிட்டவர்கள் இடைநீக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். நாடாளுமன்ற வரலாற்றில் இன்றைக்கு ஒரு கறுப்புநாளாக தான் கருதவேண்டியிருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

“புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒருபக்கம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிற சம்பவங்களும், மறுபக்கம் அதுகுறித்து குரல் எழுப்புகிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்து வெளியேற்றுகிற ஜனநாயகப் படுகொலை நடைபெற்று வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் விவாதம் செய்வதன் மூலமே கருத்துப் பரிமாற்றம் நடைபெறும். ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தைப் போன்றதாகும். ஒரு பக்கம் செல்லாததாக ஆனால், நாணையமே செல்லாததாகி விடும். அந்த கருத்துக்கு மாறாக நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுவரை அவைக்கு வருகை புரியாமல் புறக்கணிப்பதை விட எதேச்சாதிகார செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கிற அதே வேளையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிப்பதற்காகத் தான் இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் பிரதமர் மோடி மேற்கொண்ட பாசிச ஜனநாயக விரோத நடவடிக்கையை முறியடிப்பதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் ஓரணியில் திரண்டு செயல்படுவதன் மூலமே நாடாளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்படும்.” என்றும் அழகிரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com