சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஓராண்டாக சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவோ, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இவரது ஜாமின் மனுவை விசாரித்து வந்தது. இந்த சூழலில் இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்து தீர்ப்பைத் தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகள் என்ன என்பது எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படும் என நீதிபதிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு கட்டங்களாக அவரது ஜாமின் மனு நிராகரிப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 471 நாள் சிறைவாசத்திலிருந்த அவர் வெளியே வருகிறார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஊடகப் பேட்டியில் கூறுகையில், “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் குற்றவாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஜாமினுக்காக செந்தில் பாலாஜிக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் இரண்டு பேர் ஜாமின் உத்தரவாதம் வழங்க வேண்டும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.