மாநிலத்தில் 95 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன; பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்துவது மக்களுக்கு விரோதமானது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு முதலிய ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து முழு அளவிலான பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் 9,452 பேருந்துகளில் 8,787 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசியது:
“அரசியல் காரணங்களுக்காக இந்தப் போராட்டம் நடைபெறுவது திசைதிருப்பும் செயல். அதிலும் குறிப்பாக, யார் இதற்கெல்லாம் காரணமோ, எடப்பாடி பழனிச்சாமி அணியோடு சேர்ந்து கொண்டு போராட்டம் நத்துவது என்பது கவலைக்குறியது.
பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்துவது பொது மக்களுக்கு விரோதமானது, எனவே போராட்டத்தை கைவிட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் வழங்காத கோரிக்கைகளை இப்போது அதே அ.தி.மு.க.வுடன் இணைந்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்காக போராடக்கூடிய ஒரு இயக்கம். தி.மு.க. உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய இயக்கம். செய்து கொடுக்கக்கூடிய இயக்கம். செய்யக்கூடிய முதலமைச்சர் இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ்நாட்டிலேயே அரசு பேருந்துகளைக் காப்பதற்கான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். 2000 புதிய பேருந்துகளை வாங்க அரசு நிதியை ஒதுக்கி இருக்கிறார்.
புதிய பணியாளர்களை எடுக்க அரசாணை வழங்கியிருக்கிறார். நீங்கள் வைத்த கோரிக்கை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறார். நீங்கள் சொன்ன ஆறு கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை நிறைவேற்றத்தான், கால அவகாசம் கேட்கிறோம். இன்றைக்கு போக்குவரத்து சுமூகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் இடைஞ்சல் செய்ய வேண்டாம்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதால் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. உங்கள் உரிமைகளை கேட்பதில் எங்களுக்கு எந்த கருத்து மாறுபாடும் இல்லை. ஆனால், எங்கேயும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். 95 சதவீதத்துக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாதபடி போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.