”கடல்சார் வணிகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ‘மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை-2023’ திட்டம் வடிவமைக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக” அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
”கடந்த இரண்டரை வருடத்தில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கின்றது. புதிய தொழில் நிறுவனங்களுக்கான தொகுப்பு சதவீத சலுகை வழங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி,கோவை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டின் மூலம் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி, மின் வாகனம், காலணி உற்பத்தி, கண்ணாடி பொருட்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரவுள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை-2023 வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல்சார் வணிகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு மாநிலங்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், தனியார்த் துறையின் முதலீட்டை ஈர்ப்பதற்கு இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருச்சி, சேலம் மாவட்டங்களில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. " இவ்வாறு அவர் கூறினார்.