கீழ்நமண்டி... வட தமிழ்நாட்டில் ஒரு சங்ககால கிராமம்!

ஆய்வு நடைபெறும் இடத்தில் உள்ள கல் வட்டங்கள்
ஆய்வு நடைபெறும் இடத்தில் உள்ள கல் வட்டங்கள்
Published on

எழுதப்பட்ட வரலாற்றிலிருந்து எழுதப்படாத வரலாற்றுக்கு அழைத்துச் செல்கிறது கீழ்நமண்டி கிராமம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த கிராமம், வந்தவாசியின் தென்மேற்கில், 21 கிலோமீட்டரில் தொலைவில் அமைந்துள்ளது. அங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், அதன் தெளிவான அமைப்பு முறை, தொல்லியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வந்தவாசியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் சமணத்தாலும் அதன் தொல்லியல் அடையாளங்களாலும் தான் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய வரலாற்றுக்கு இழுத்துச் செல்கிறது கீழ்நமண்டி.

வட தமிழ்நாட்டின் சமூகப் பண்பாட்டினையும், அதன் தொன்மையினையும் உணர்த்துவதாக கீழ்நமண்டி இருக்கலாம். இவ்விடத்திற்கு தென்மேற்கே தொண்டூர், நெகனூர்பட்டி, செஞ்சி, திருநாதர்குன்று என தமிழி எழுத்துக்கள் கிடைக்கும் இடங்கள் உள்ளன. அதேபோல், சீயமங்கலம் (தென் இந்தியாவின் முதல் குகை கோவில்), திருமால்பாடி (முதலாம் ஆதித்த சோழன் கட்டிய கோவில் உள்ள ஊர்), தெள்ளார் (தேவாரம் வைப்புத்தளம்), பொன்னூர் (சமணத்தளம்) போன்ற எழுதப்பட்ட வரலாற்று தளங்களும் அருகிலேயே உள்ள கீழ்நமண்டியில், அகழாய்வு செய்வதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த  மார்ச் முதல் வாரத்தில் முப்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்கி வைத்துள்ளார்.

 “பெருங்கற்காலம் என்பது இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களைப் பல பெரிய கற்களைக் கொண்டு கல் வட்டங்கள், கல் பதுக்கைகள், கல் திட்டுகள் போன்றவற்றை அமைப்பதாகும். கீழ்நமண்டியில் உள்ள ஈமக்காடும் (Burial ground) அப்படியானதுதான். இங்குள்ள கல் வட்டங்கள், கல் பதுக்கைகள், கல் திட்டுக்கள் தெளிவான அமைப்புடன் இருப்பதுதான் இதன் தனி சிறப்பே. இப்போதைக்கு ஒரு இருபது இருபத்தைந்து கல் வட்டங்கள் காணப்படுகின்றன. இன்னும் நிறைய இருந்திருக்கலாம், இங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த கல்குவாரியால் அதெல்லாம் சிதைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கல் வட்டத்துக்குள் நான்கைந்து அறைகள் (slab) காணப்படுகின்றன.  இறந்த மனிதர்களின் உடலை மண் பானைக்குள் வைத்து, உடலைப் புதைத்திருப்பார்கள். இதனுடன் பானைகள் போன்ற சில பொருட்களை வைத்திருப்பார்கள்.

 தற்போது மூன்று கல் வட்டங்களில் தான் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அடுத்த கல் வட்டங்களில் இனி ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல், பெருங்கற்கால காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதிகளையும் அகழாய்வு செய்ய உள்ளோம்.

இதுவரை கிடைத்துள்ள பெரும்பாலான பொருட்கள் பெருங்கற்கால பண்பாட்டில் கிடைக்கக் கூடியவை தான் கிடைத்துள்ளது. இந்தப் பகுதிக்கென்றே கிடைக்கக் கூடிய பொருட்கள் என்று எதுவும் கிடைக்க வில்லை.

இப்போது ஐம்பத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணிகள் நடைபெறுகிறது. இந்தப் பகுதியைச் சுற்றி நிறைய பழங்கால தொல்பொருட்கள் கிடைக்கின்றன.” என்கிறார் கீழ்நமண்டி தொல்லியல் அலுவலர் விக்டர்.

துர்க்கை சிலை
துர்க்கை சிலை

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கீழ்நமண்டியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாக அப்பகுதி, ஆடு, மாடுகள் மேய்க்கும் பகுதியாக இருந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பாக அப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அதே கிராமத்தில் ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட துர்க்கை சிலையொன்றும் உள்ளது, ஊரின் கிழக்குப் பகுதியில்.

கீழ்நமண்டியில் தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக தொல்லியல் துறைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோரிக்கை மூலம் வலியுறுத்து வந்த, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகனிடம் தொடர்பு கொண்டு பேசினோம், “தேசூர் அடுத்த குண்ணகம்பூண்டியை சேர்ந்த பழனி கொடுத்த தகவலின்படி, கடந்த 2020ஆம் ஆண்டு கீழ்நமண்டி கிராமத்திற்கு சென்றோம். பெரிய அளவிற்கு சிதைவில்லாத பத்து பதினைந்து கல் வட்டங்கள் தெரிந்தன.

இங்குள்ள கல்வட்டங்களில் நெடுங்கல் அல்லது குத்துக்கல் (Menhir) என்று சொல்லப்படுகின்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கூர்மையான பாறைக்கற்கள் இரண்டு இடங்களில் உள்ளன. பாறைக் கீறல்கள் கிடைக்கின்றன. கல்வட்டங்களில்  குழிக்குறி பாறைகள் (Cup Marks stone) ஏறக்குறைய முப்பது உள்ளன. சில கல்வட்டங்களில் உள்ளிருந்த ஈமப்பேழைகள், மண்குடுவைகள், பானைகள் உள்ளிட்டவை சிதறிக் கிடந்தன.  அப்பகுதியில் கிடைத்த, சிதைந்து போன பானை ஓடுகள் தாலுக்கா அலுவலகத்திலும், எங்களுக்குத் தகவல் சொன்ன பழனி என்பவரும் வைத்திருந்தார். நாங்கள் பார்த்த எல்லா பானை ஓடுகளிலும் கருப்பு – சிவப்பு நிறங்கள் உள்ளன. நிறையக் குறியீடுகளும் இருந்தன. இவை சங்ககாலத்தைச் சேர்ந்தவை.

நாங்கள் பார்வையிட்டதன் அடிப்படையில் கீழ்நமண்டி பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என கணித்தோம். அது தொடர்பாக செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிட்டதோடு, தமிழக தொல்லியல் துறைக்கும் மனுக் கொடுத்தோம். இப்போது முதல் கட்ட அகழாய்வு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கீழ்நமண்டியில் மட்டும் தான் பெருங்கற்கால பண்பாட்டின் குழிக்குறிப் பாறைகள் (Cup Marks stones) கிடைத்துள்ளது. அங்கேயே குத்துக்கல், பானை ஓடுகள், கீறல்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. பழங்கால மக்கள் வாழ்ந்த பகுதியாக இது உள்ளதால் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.” என்றார்.

கல்வட்டம்
கல்வட்டம்

இனக்குழுப்போர், ஆநிரைகாத்தல், எல்லைப்போர், விலங்குகளோடு சண்டையிடல் என ஏதோவொரு காரணம் கருதி இறந்து போன ஒருவனுக்கு (வீரன்) அல்லது வயது முதிர்ந்து இயற்கை மரணம் கொண்ட ஓர் இனக்குழுத் தலைவனுக்கு (Tribal leader) அமைக்க பெற்ற ஈமச்சின்னங்களே கீழ்நமண்டியில் கிடைத்துள்ளன. அதேபோல், ஈமாக்காட்டையொட்டி அமைந்த குடியிருப்புப் பகுதிகள் எதிர்காலத்தில் ஆய்வுகள் நடக்கும் எனில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இப்பகுதிகள் வாழ்விடங்களாக இருந்துள்ளன என்பதை அறுதியிட்டு கூற முடியும் என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com