"போன்சாய் செடி போன்றவர் தான் ஸ்டாலின்” - விடுதலையான சவுக்கு சங்கர் கடும் தாக்கு!
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.
பெண் போலீஸார் மற்றும் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர் மீது கோவைசைபர் க்ரைம் போலீஸார் வழக்குபதிவு செய்து, கைது செய்தனர். மேலும், அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பின்னர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து வதந்திபரப்பியதாகவும், தமிழக அரசுக்கு எதிராக மக்களை போராடத் தூண்டியதாகவும் கூறி, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.
எனினும், அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததையடுத்து, அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் மாதம்உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப் பொருள் வழக்கில் இரண்டாவது முறையாக சவுக்குசங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல்ரோஹ்தகி, சித்தார்த் லுத்ரா ஆகியோர், "சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை மறுபரிசீலனை செய்த அறிவுரைக் கழகம், அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்று கொள்கிறோம்" என்று தெரிவித்தனர். தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அவருக்கு எதிராக வேறு வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லை என்றால், அவரை ஜாமினில் விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் நேற்று மாலை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். சிறைக்கு வெளியே சவுக்கு சங்கரை அவரது வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
மதுரை சிறையிலிருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பவள விழா கொண்டாடும் அரசு என்னை இரண்டு முறை குண்டார் சட்டத்தில் அடைத்துள்ளது. திமுக அரசின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியதற்காகவே என் மிது 17 வழக்குகள் போட்டது.
எனக்கு 3 இடங்களில் எலும்பு உடைந்தது. கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் போலீஸார் காவலில் எடுக்கும்போது, திமுக அரசுக்கு எதிராகப்பேசக்கூடாது என்றும், அரசுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதை ஏற்றால் உடனடியாக விடுவிப்பதாகவும், மீறினால் சிறையிலிருந்து விடமாட்டோம் என்றும் கூறி, கடும் நெருக்கடிகொடுத்தனர். ஆனால், உண்மையைப் பேச அஞ்சமாட்டேன் என்று கூறியதால், இரண்டாவதி முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டேன். முதல்வர் ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவரோ, விமர்சனங்களுக்குப் பழகியவரோ கிடையாது. தந்தையின் நிழலில் வளர்ந்த போன்சாய் செடி போன்றவர்தான் அவர். கருணை அடிப்படையில் பணிக்கு வந்ததுபோல, தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றவர். எந்த உண்மையும் வெளிவரக் கூடாது என்பதில் முதல்வரும், அமைச்சர் உதயநிதியும் கவனமாக இருக்கின்றனர்.
2023 டிசம்பரில் டிஜிபி சங்கர்ஜிவால், "தமிழகத்தில் சட்டவிரோத மெத்தனால் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. இதை தடுக்கவில்லை என்றால், மரக்காணத்தில் ஏற்பட்டதைபோல மீண்டும் துயரச் சம்பவம் நடைபெறும்" என முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்தக் கடிதத்தின் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், கள்ளக்குறிச்சியில் 66 பேரை இழந்திருக்கமாட்டோம். சவுக்கு மீடியாவில் பணியாற்றுவோர் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டி இருக்கிறார்கள். 5 மாதத்துக்குப் பிறகு சிறையில் இருந்து வெளிவந்துள்ளேன். எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே இருந்த வீரியத்துடன் மீண்டும் செயல்படுவேன்.” இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.