அ.தி.மு.க.வில் குறிப்பிட்ட சாதி அரசியல்…!- சசிகலா பேட்டி

வி.கே. சசிகலா
வி.கே. சசிகலா
Published on

அ.தி.மு.க.வில் குறிப்பிட்ட சாதி அரசியல் நடப்பதாக வி.கே. சசிகலா வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்த வி.கே. சசிகலா, பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

அ.தி.மு.க. தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. அதற்குக் காரணம் ஒரு சில சுயநலவாதிகள் இந்த இயக்கத்தை இந்த அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அ.தி.மு.க. மீது எனக்குப் பற்றிருப்பதைத் தெரிந்து, என்னிடம் அரசியல் விவகாரங்கள் குறித்து எம்.ஜி.ஆர். பேசுவார். அப்போது அவரிடம் நான் கண்டது, யாரையும் தூக்கிப் போட்டுவிடக் கூடாது என்பதுதான். அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்கு முன்னுரிமைக் கொடுப்பார்.

எனக்கு இந்த ஊர்தான் சொந்த ஊர். எனக்கு இந்த சாதிதான் சொந்த சாதி என்று கிடையாது. ஜெயலலிதாவும் சாதி பார்ப்பவர் கிடையாது. அப்படி அவர் பார்த்திருந்தால், என்னிடம் பழகியிருக்கவே மாட்டார். ஆனால், அ.தி.மு.க.வில் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியென்று நினைத்து சாதி அரசியலுக்குள் போகிறார்கள். நிறையபேர் சாதி அமைப்புகள் வைத்து நடத்துகின்றனர். அப்படி ஆசைப்பட்டால் சாதி அமைப்புகளை நடத்தலாம். ஆனால் எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கம், ஜெயலலிதா வளர்த்த இயக்கம். இந்த இயக்கத்தில் சாதி அரசியல் செய்வதை யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க. தொண்டர்களோ, நானோ பொறுத்துக் கொள்ள முடியாது. நான் அப்படி எல்லாம் சாதி பார்த்திருந்தால் நான் ஏன் பெங்களூர் போகிறபோது எடப்பாடி பழனிசாமியிடம்முதல்வர் பதவியைக் கொடுத்துவிட்டுப் போகிறேன்? நான் சாதி பார்த்திருந்தால் அப்படி செய்திருப்பேனா? நான் சாதி பார்க்கவில்லை. மேற்கு மாவட்ட மக்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே ஆதரவு தெரிவிக்கின்றனர். அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்றுதான் செய்தேன்.

இப்போது நல்ல நேரம் வந்திருக்கிறது. அ.தி.மு.க. அழிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். இப்போதுதான் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்திருக்கிறது. 2026-இல் அ.தி.மு.க. ஆட்சி அமையும். நான் ரொம்ப பேசமாட்டேன். முக்கியமான நேரத்தில்தான் குரல்கொடுப்பேன். தமிழ்நாடு முழுக்க பயணம் செல்லப்போகிறேன். பட்டிதொட்டி எங்கும் செல்லப்போகிறேன்.” என்று கூறிய சசிகலா, அ.தி.மு.க. இடைத்தேர்தல் புறக்கணித்தது சரியான முடிவு இல்லை என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com