திருச்சி முக்கொம்புக்கு நண்பருடன் சென்ற சிறுமியை பாலியல் கொடுமை செய்த உதவி காவல் ஆய்வாளர், மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்; போக்சோ சட்டத்தில் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி முக்கொம்புவில் உள்ள பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 வயது சிறுமி ஒருவர், தன் நண்பருடன் சென்றுள்ளார். அவர்கள் அங்கு பேசிக் கொண்டிருந்தபோது, உதவி காவல் ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் பிரசாந்த், சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த் ஆகியோர் சாதாரண உடையில் போதையில் இருந்துள்ளனர்.
தனிமையில் இருந்த சிறுமியையும் அவரின் நண்பரையும் மிரட்டி தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். அந்தச் சிறுமியை மட்டும் தாங்கள் வந்த காருக்குள் கொண்டுசென்று, பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். அதை வீடியோவாகவும் எடுத்து, “நாங்கள் எப்போது கூப்பிட்டாலும்” வரவேண்டும் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.
இருவருக்கும், அந்த நான்கு பேரும் காவல்துறையினர் என்று தெரியாத நிலையில், முக்கொம்புவில் உள்ள காவல் நிலையத்தில் முறையிடச் சென்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த நால்வரும் காவல்துறையினர் என்பது தெரியவர, பிரச்னை வெளியே தெரிந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலச்சந்திரன் நான்கு பேரிடமும் விசாரித்து, சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று, கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளையும் பார்த்தார். தொடர்ந்து, சிறுமியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குற்றம் உறுதியான நிலையில், உதவி காவல் ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் பிரசாந்த், சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த் நால்வரும் இடை நீக்கம் செய்ய்யப்பட்டனர்.
போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றத்தைத் தடுக்கவேண்டிய காவல்துறையினரே சிறுமியிடம் வன்கொடுமையில் ஈடுபட்டது, காவல்துறையினரைத் தலைகுனியச் செய்துள்ளது.