“உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் அவரை ஏற்றுக்கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பாப்பம்மாள் சார்பாக அவரது பேத்தி ஜெயசுதாவிடம் பெரியார் விருதையும், அறந்தாங்கி மிசா இராமநாதனுக்கு அண்ணா விருதினையும், ஜெகத்ரட்சகன் எம்பிக்கு கலைஞர் விருதையும், கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருதையும், வி.பி.ராஜனுக்கு பேராசிரியர் விருதையும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்பி தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விருது வென்ற எஸ்.எஸ். பழனி மாணிக்கம் நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
"திமுக-வின் வெள்ளி விழா, பொன்விழா ஆண்டை கலைஞர் கொண்டாடினார். பவள விழா ஆண்டை முதலமைச்சராகிய நீங்கள் கொண்டாடுகிறீர்கள்.
நீங்க நின்ற தேர்தல் மட்டுமல்ல, நீங்கள் நின்று நடத்திய அனைத்து தேர்தலிலும் வெற்றி தேடிக்குவித்துள்ளீர்கள். நீங்கள் உழைத்த உழைப்புக்கான வெற்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிற்கும் உருவாக்கி வைத்துள்ளீர்கள்.
இந்தியாவில் உள்ள எல்லா அரசாங்கமும் திராவிட மாடல் அரசை பின்பற்றுகின்றன. கொள்கை யுத்தத்தில் பின்வாங்காமல் இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கும் தலைமை தாங்குகிறீர்கள்.
உங்கள் பெயரால் எனக்கு விருது வழங்கியது என் வாழ்நாளில் நான் செய்த பாக்கியம். சோதனையான காலகட்டத்தில் என்னை தூக்கி நிறுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கும் கழகத்திற்கும் உழைப்பதுதான் என்னுடைய பணி.
கழகத்தில் யாரை முன்னிறுத்தினால் பொதுமக்களை கவர முடியுமோ, கழகத் தோழர்களை வெறியோடு கட்சி வேலை செய்ய சொல்ல முடியுமோ அவரைத்தான் முன்னிறுத்த வேண்டும். உங்களுக்கும் மேடையில் உள்ள தலைவர்களுக்கு ஏன் இன்னும் தயக்கம்? உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் துணை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என பேசினார். அப்போது அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் கைதட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.
திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அமைச்சராகப் பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டார்.
இந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், உதயநிதி துணை முதலமைச்சராக்கப்பட வேண்டும் என எஸ்.எஸ். பழனிமாணிக்கம் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.