ஷியா முஸ்லிம்கள் சென்னையில் பேரணி... இஸ்ரேலைக் கண்டித்து!

Shia muslims peace procession in Chennai against Israel attacks
ஷியா முஸ்லிம்கள் பேரணி
Published on

இஸ்ரேல் அரசின் போரைக் கண்டித்து ஷியா பிரிவு முஸ்லிம்கள் சென்னையில் இன்று பேரணி நடத்தினார்கள். 

பாலஸ்தீனம், இலெபனான், சிரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் போர் ஓராண்டாக நீடிக்கும் நிலையில், போருக்கு எதிராக உலகம் முழுக்க போராட்டங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக, ஷியா பிரிவு முஸ்லிம்கள் இஸ்ரேலைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் சார்பில் சென்னை, இராயப்பேட்டையில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. ஷியா காசி குலாம் முஹம்மது மெஹதி இதற்குத் தலைமைவகித்தார்.

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

பேரணியின் முன்வரிசையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி சிலர் செல்ல, நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இஸ்ரேலின் போரில் கொல்லப்பட்ட ஆயுதக்குழுவினருக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் தொடங்கி அப்பகுதியின் பல தெருக்கள் வழியாக புதுக் கல்லூரியை நோக்கித் திரண்டபோது சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு ஆண்களும், பெண்களுமாக பெரிய கூட்டமாக இருந்தது.

அனைவரையும் கைதுசெய்யத் தொடங்கிய காவல்துறையினர், குறிப்பிட்ட சிலரை மட்டுமே கைதுசெய்து சென்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com