பழனி அருகே சத்துணவுப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திண்டுக்கல் பா.ஜ.க. மேற்கு மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பெண் ஒருவர் சத்துணவுப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வழக்கம்போல் காலை உணவு சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வராணியின் கணவரும் திண்டுக்கல் பா.ஜ.க. மேற்கு மாவட்டச் செயலாளருமான மகுடீஸ்வரன், சமையல் பொருட்களைக் கணக்குப் பார்க்க வேண்டும் என்று கூறி, அந்த பெண்ணை சமையல் அறைக்கு அழைத்துள்ளார். அந்த பெண் அறைக்குச் சென்றதும் மகுடீஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உட்பட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விவகாரம் பா.ஜ.க. தலைமைக்குத் தெரியவர மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது.
இந்நிலையில், கடந்த நான்கு நாள்களாக மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் இன்று கைது செய்தனர்.
பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.