ஓடிடி தளங்களுக்கு சென்சார் கொண்டுவரப்படும் என்று கூறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமரன் படம் போன்று தேசப்பற்றை வலியுறுத்தும் படங்கள் இன்னும் வரவேண்டும் என கூறியுள்ளார்.
கோவாவில் 55ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக சென்னை எழும்பூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கலைப்புலி தாணு, இயக்குநர் செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின், செய்தியாளர் சந்திப்பில் எல்.முருகன், "சினிமாவுக்கான தீர்ப்பாயம் மும்பையில் தான் தற்போது உள்ளது. இந்த தீர்ப்பாயம் தென்னிந்தியாவில் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை ஏற்று சினிமா தீர்ப்பாயம் சென்னையிலோ அல்லது பெங்களூரிலோ கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓ.டி.டி-க்கு சென்சார் வேண்டுமென கேட்கப்படுகிறது. அதற்கான புதிய ஒளிபரப்பு கொள்கை குறித்து மக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது. இது முடிந்தபிறகு, அனைத்து ஆலோசனைகளும் தொகுத்து சட்டமாக கொண்டுவரப்படும்" என்று பேசினார்.
அமரன் படம் குறித்து கேள்வி கேட்டபோது, "நாட்டு பற்று படம் அதிகம் வரவேண்டும். அதை ஊக்குவிப்பது அரசாங்கம் மற்றும் மக்களின் பொறுப்பு. அமரன் போன்ற நல்ல படங்களை, தேசபக்தி உள்ள படத்தை வரவேற்பது நாட்டின் மீது நமக்குள்ள மரியாதை ஆகும்.
அமரன் படம் தவறாக சித்திரிக்கவில்லையே… ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். மிக முக்கியமாக, உண்மையை கூறியிருக்கிறார்கள். அந்த இயக்குநரையும், பட தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்." என்று பதில் அளித்துள்ளார்.