"சேகர் பாபு இந்து என்பதில் பெருமை; சனாதனத்தை ஏற்க முடியாது” - நீதிமன்றத்தில் வாதம்!

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
Published on

“அமைச்சர் சேகர்பாபு இந்துவாகப் பிறந்ததை பெருமையாகக் கருதினாலும், அதற்காக ஒருபோதும் சனாதனத்தை ஏற்க முடியாது” என்று சேகரின் பாபுவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதால், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது," இந்து மதத்தில் ஸ்மிருதி அடிப்படையானது. இதை உருவம் இல்லா இறைவன் உருவாக்கினான் என்றும் மனுஸ்மிருதி என்பது மனிதனால் உருவாக் கப்பட்டது என்றும் இந்து நூல் கூறுகிறது. இந்து மதம் காலத்துக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது. உருவம் இல்லாத இறைவன் முதலில் இருந்தார். பின்னர் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற பல வடிவில் இறைவன் வந்தார் அதைத்தொடர்ந்து ராமர், கிருஷ்ணன் வந்து, தற்போது சாய்பாபாவும் வந்துவிட்டார். எனவே, சனாதன ஒழிப்பு விவாதம் கண்டு கோபப்படாமல் அதை மாற்றத்துக்கான ஒரு வழியாகப் பார்க்கவேண்டும்.

இந்து மதத்தை எதிர்த்து புத்தர் புத்த மதத்தையும், குருநானக் சீக்கிய மதத்தையும், சமரச சுத்த சன்மார்க்கத்தை ராமலிங்க அடிகளாரும் உருவாக்கினர். அவர்களைப் போல பலர் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளைக் கூறியுள்ளனர். அந்த வழியில் உதயநிதி ஸ்டாலின் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது என்ன தவறு? சதுர் மறை ஆகம சாத்திரமெல்லாம் சந்தைப் படிப்பு, நம் சொந்தப் படிப்போ? என்று கேள்வி எழுப்பிய வள்ளலாரும் இந்துதான். சேகர் பாபு ஐயப்ப பக்தர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான். இந்துவாகப் பிறந்ததைப் பெருமையாகக் கருதினாலும், அதற்காக ஒருபோதும் சனாதனத்தை ஏற்க முடியாது. ஏன் என்றால், பிரம்மாவின் வாயில் இருந்து பிராமணன் வந்தான் என்று ஒவ்வொரு உறுப்பு வழியாக 4 வர்ண மக்கள் வந்தனர் என்று கூறுகின்றனர். இவர்கள் எல்லாம் ஒருதடவைதான் பிரம்மன் உடலில் இருந்து வந்தனரா? அதன்பின்னர் இதுநாள் வரை அவர்கள் சந்ததியினர் வரவே இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

அதுமட்டுமல்ல. பன்றி நுகர்ந்த உணவையும் சூத்திரன் கண்ணால் பார்த்த உணவையும் உண்ணக்கூடாது என்று இந்த சனாதனம் கூறுகிறது. இப்படிப்பட்ட சனாதனம் நமக்குத் தேவையா? இதை ஒழிக்க வேண்டாமா?

மனிதனை தரம் தாழ்த்தும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது ஆகிவிடும்? திராவிடனும், ஆரியனும் இந்துதான். ஆனால், என் கொள்கையைத்தான் நீ பின்பற்ற வேண்டும் என்று ஆரியன் நிர்ப்பந்தம் செய்யும்போதுதான் பிரச்சினை எழுகிறது. கோவில்களில் எத்தந்த சாதியினர் எந்த இடத்தில் இருந்து சாமி கும்பிட வேண்டும்? என்று சென்னை உயர்நீதிமன்றம் 1914ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்டு முழு அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், “இந்துக்கள் என்பது ஆரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போதைய ஈரான் நாட்டில் இருந்து வந்து, சிந்து நதிக்கரையில் தங்கியிருந்தனர். இவர்களைத்தான் இந்தோய் என்று அழைத்து அதுவே இந்து என்று மருவியது” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தில் இந்து மதம் என்பது அருங்காட்சியகத்தில் உள்ள பொருள் போல, அது காயத்துக்கு ஏற்ப மாறிவிடும் என்று கூறியுள்ளார். எனவே இந்து மதம் மாற்றத்தைக் காணவேண்டும் என்றால், இது போல விவாதங்களை ஏற்க வேண்டும்.

இந்துக்களுக்கு சனாதனம்தான் பொதுவான என்பதை ஏற்கமுடியாது. அதை எதிர்ப்பதால், அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறவும் முடியாது.” என்று ஜோதி தன் வாதத்தை முன்வைத்தார்.

தி.மு.க எம்.பி. ராசா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணை இன்றைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com