வாக்காளர் பட்டியல் சேர்க்கை, திருத்த முகாம்களில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகர, பகுதி, வட்ட, ஒன்றிய, கிளை உட்பட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தொய்வோ, அலட்சியமோ காட்டாமல் மிகுந்த பொறுப்புணர்வுடன் பெயர்களைப் பதிவதில் ஒருங்கிணைந்து, விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தன் கட்சியினருக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ தேர்தல் ஆணையம் நவம்பர் 09, 10, 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்தவிருக்கிறது. இச்சிறப்பு முகாம்களில் 18-வயது நிறைவடைவோர் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறவிருக்கின்றன. அதைத் தொடர்ந்து, 2025 சனவரி 1-ஆம் தேதி அன்று படங்களுடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியலும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவிருக்கிறது.” என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியமாகும் வகையில், நாம் தமிழர் உறவுகள் அனைவரும் இவ்வாய்ப்பைத் தவறவிடாமல், சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
”மக்களாட்சி முறைமையில் வலிமைமிக்க ஆயுதம் தேர்தலில் நாம் அளிக்கும் வாக்குகளே. அதிகார அடக்குமுறைகளை உடைத்தெறிய கடைக்கோடி குடிமகனுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு வாக்குரிமை மட்டுமே. ஆண்டாண்டு காலமாய் எளிய மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளிலிருந்து விடுபட புரட்சிகர மாற்றத்திற்கான மக்களாட்சித் திறவுகோலாக விளங்கும் வாக்குரிமையைப் பயன்படுத்த வாக்காளர் பட்டியலில் நம் பெயர் விடுபடாமல் சரிபார்த்துக் கொள்ளுதலும் மிகவும் இன்றியமையாததாகும்.
ஆகவே, அன்பிற்குரிய நாம் தமிழர் உறவுகள் தங்கள் பகுதியில் இளம் தம்பி-தங்கைகளுக்கு இந்தச் சிறப்பு முகாம்கள் குறித்து எடுத்துக்கூறி, அவர்கள் அனைவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து உறுதிசெய்து கொள்ளவும். இன்றளவும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாத / பதிவு செய்தும் பட்டியலில் இடம்பெறாத இளம் பிள்ளைகளிடம் உரிய ஆவணங்களைப் பெற்று, அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் முறையாக இணைப்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டு, அவர்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டைபெற உதவிட வேண்டும்.
மேலும், நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் தங்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என்பதையும் தவறாமல் சரிபார்த்துக் கொள்ளவேண்டும். அத்தோடு, வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி, திருத்தம் தேவைப்படும் உறவுகளுக்கு அதற்கான வழிகாட்டு உதவிகளையும் செய்துதர வேண்டும்.
எனவே, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகர, பகுதி, வட்ட, ஒன்றிய, கிளை உட்பட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் மிக முக்கியமான இப்பணிகளில் எவ்வித தொய்வோ, அலட்சியமோ காட்டாமல் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஒருங்கிணைந்து, விரைந்து செய்து முடிக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தாங்கள் செய்த பணிகளைத் தொகுதிவாரியாக உரிய முறையில் தலைமை அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்துகிறேன்.” என்று சீமானின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.