மகாவிஷ்ணு விவகாரம் அமைச்சருக்குத் தெரியாதா?- சீமான் கேள்வி!

mahavishnu issue
கேள்விகேட்ட ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடும்படும் மகாவிஷ்ணு(கோப்புப்படம்)
Published on

சர்ச்சையாகப் பேசிய மகாவிஷ்ணு விவகாரம் கல்வி அமைச்சகத்துக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ள நா.த.க.தலைவர் சீமான், இதற்காகத் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்தது தவறு என்றும் குறைகூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்ச்சைப் பேச்சாளரின் பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.

“ சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.” என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். 

”குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல், அவர்கள் அனுமதியின்றி நடைபெற்றதா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் நடைபெற்றதா? அப்படி தெரியாமல் நடைபெறுகிறது என்றால் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்? அந்த அளவிற்கு அரசு வலிமையற்றதாக இருக்கிறதா?

ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின், அமைச்சகத்தின் அனுமதியோடுதான் நடைபெற்றதென்றால் அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது?

ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்வுகள் அரங்கேறி கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதிலிருந்து அரசு பாடம் கற்கவில்லையா? பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்?

அறிவுக்கருவறையில் நம்மைச் சுமக்கின்ற தாயாகத் திகழும் ஆசிரியப்பெருமக்களைப் பார்க்கும்போது வணங்குவது, மனதில் வைத்து போற்றுவதுதான் தமிழர் மரபு. அதைவிடுத்து ஆசிரியர் தினமன்று, ஆசிரியர் கால்களை மாணவ- மாணவியர் கழுவி, அதற்கு பூசைகள் செய்வது என்ன மாதிரியான நடைமுறை? இதெல்லாம் யாருடைய பண்பாடு? இப்புதிய பழக்கங்களை வலிந்து திணிப்பது யார்? தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இவ்வாறு நடைபெறுவதை பள்ளிக்கல்வித்துறை எப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது?

அத்தனையையும் அனுமதித்துவிட்டு, வெளியே தெரிந்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசும், அமைச்சகமும் தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் கடைநிலை அரசு ஊழியர்களைப் பலியாக்குவது ஏன்?” என சீமான் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். 

மேலும், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பலியாக்கப்பட்டனர். தற்போது பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்றுள்ள நிகழ்வுகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு, அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடைபெற்றது என்பதை எப்படி நம்ப முடியும்? தலைமையாசிரியர்கள் மட்டும் தண்டிக்கப்படுவதை எவ்வாறு ஏற்க முடியும்?

அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம்

மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்?

ஆகவே, சென்னை அசோக்நகர் பள்ளியின் தலைமையாசிரியர் அம்மா தமிழரசி அவர்களுக்கு வழங்கியுள்ள இடமாற்ற தண்டனையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டுமெனவும், இனி இதுபோன்ற தவறுகள் நிகழாது மிக கவனமாகச் செயல்பட வேண்டும்.” என்றும் சீமானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com