குறைந்த அளவில் மருத்துவர்களை வைத்துக் கொண்டு 24 மணி நேரப் பணிசெய்ய மருத்துவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அச்சங்கத்தின் சார்பில் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
1) எங்களது நீண்ட நாள் கோரிக்கையான அரசாணை 354 ஐ மறுஆய்வு செய்து DACP ஊதியம் மற்றும் பணி உயர்வு வழங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசாணை 293-ஐ மாற்றம் செய்து வழங்கியதில் ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் பல் மருத்துவர்களுக்கு இன்னும் கிடைக்கவேண்டிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
2) அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகிய அனைத்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் பெருகிவரும் நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
3) அரசு மருத்துவர்களுக்கு முகத்தைக் காட்டி தினமும் வருகையைப் பதிவுசெய்ய அதற்கான செயலியை எங்களுடைய அலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே காலிப் பணியிடங்களால் பெரும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவர்களை மட்டும் பலவிதமான முறைகளில் தொடர்ந்து வருகைப்பதிவேடு செய்ய நிர்பந்திப்பது மிகுந்த மனவேதனை அடையச்செய்கிறது. இதை சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
4) குறைந்த அளவில் மருத்துவர்களை வைத்துக்கொண்டு 24 மணி நேரப் பணிகளில் மருத்துவர்களைச் செய்ய அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மக்களின் உயிருக்கும் மருத்துவர்களின் உடல் நலனிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அரசு உடனடியாக அனைத்து மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் பணிசெய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
5) குறைந்தது ஏழு மருத்துவர்கள் இல்லாமல் 24 சேவையை நடத்தக்கூடாது. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் UPHC, Cemonc, சிறிய மருத்துவமனைகளில் 24 மணி நேர சேவையை ரத்துசெய்ய வேண்டும்.” என்று அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.