சவுக்கு வழக்கு: உச்சநீதிமன்றம் அடுக்கிய கேள்விகள்!

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்
Published on

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கைகள் எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில், அதை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து, கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் நேற்று குண்டர் சட்டம் பதியப்பட்டது.

இதற்கிடையே, தன் மீது பதியப்பட்டுள்ள சுமார் 17 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் சவுக்கு சங்கர். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன், ‘சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கியபோதும் கூட, அடுத்த நாளே அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கை’ என வாதிட்டார்.

அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதி, ”நாங்கள் ஜாமின் வழங்கிய பிறகு குண்டர் சட்டம் போடப்பட்டதா” என்பதை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

இதையடுத்து, சவுக்கு சங்கர் தொடர்ந்திருக்கும் வழக்கின் மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சவுக்கு சங்கர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை பட்டியலாகத் தயார் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் குண்டர் சட்டம்

சோளகர் தொட்டி நாவல் ஆசிரியரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ச. பாலமுருகன் தன்னுடைய முகநூல் பதிவில், “நாட்டிலேயே அதிகமாக குண்டர் சட்டம் தமிழ் நாட்டில் தான் போடப்படுகிறது. நாட்டில் உள்ள ஒட்டு மொத்த குண்டர் சட்ட சிறைவாசிகளில் 51.2 விழுக்காடு தமிழ் நாட்டில் போடப்பட்ட வழக்குகள் ஆகும். கடந்த 2022 ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் நீதிபதி ரமேஷ் மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அமர்வு தமிழக காவல்துறையினர் தடுப்பு காவல் சட்டங்களை தவறாக பயன்படுத்துவதை சுட்டி காட்டியது.ஆனால் காவல்துறையினர் நீதிமன்றம் கவனப்படுத்திய தவறுகளை கலையாமல் தொடர்ந்து அதிகார அத்துமீறல் நடத்துகின்றனர்.

தமிழக முதல்வர் இது போன்ற அத்துமீறல்களைத் தடுத்தும், இவை தொடர்பாக தனது தலையீட்டை செய்தும் தனிநபர் உரிமைகளை காக்க முன் வரவேண்டும். இந்த குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com