சனாதனம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்த வழக்கில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்கவேண்டும் என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும் அமைச்சர் உதயநிதி மீது ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் உட்ப பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை எல்லாம் ஒரே வழக்காக இணைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் உதயநிதி ரிட் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து அமைச்சர் உதயநிதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதே சமயம், பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளை தமிழகத்துக்கு மாற்றக் கோரியதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.