தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் 2 பேர் இன்று சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
கடந்த மார்ச் 26ஆம் தேதி எழும்பூரிலிருந்து நெல்லை நோக்கி சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 3 பேரிடம் இருந்து மொத்தம் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ஓட்டுனர் பெருமாள் ஆகிய 3 பேர் என தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு சென்றதாக தெரிவித்தனர். ஆனால் தனக்கும் பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் திட்டவட்டமாக மறுத்தார். அதன்படி தாம்பரம் போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பணம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் எழுப்பியிருந்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 3 செல்போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் நெருங்கிய உறவினர் முருகன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் உறவினர்களான முருகன், ஜெய்சங்கர் ஆகிய இருவரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். இருவரிடமும் விசாரணை நடத்திய பின் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.