ரவுடி என்கவுண்டர்… மடக்கி மடக்கி கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!

ரவுடி என்கவுண்டர்… மடக்கி மடக்கி கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!
Published on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த 11 பேரில் திருவேங்கடமும் ஒருவர். போலீசார் இவரிடம் விசாரணை நடத்த இன்று காலை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்து சென்றுள்ளனர். அப்போது, திருவேங்கடம் தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதனால் திருவேங்கடத்தை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் இரண்டு முறை சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்டதில், திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில், திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி - அதிமுக பொதுச்செயலாளர்

காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது..?

கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா..?

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்!

இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும்.

அன்புமணி ராமதாஸ் – பாமக தலைவர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த எதிரிகள் காவல்துறை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, அவர்களில் சிலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற ஐயம் எழுந்தது. திருவேங்கடம் சுட்டு கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அந்த ஐயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மிக முக்கிய கொலை வழக்கில் சரணடைந்த எதிரியை அதிகாலை நேரத்தில் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் செல்ல எந்த தேவையும் இல்லை.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடத்தை சுட்டுக்கொலை செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரவுடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன்வாயிலாக, சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இது தொடர்பாக எழுந்துள்ள ஐயங்களை அரசுதான் போக்க வேண்டும்.

அதற்காக திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நான் வலியுறுத்தியவாறு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

அண்ணாமலை – தமிழக பாஜக தலைவர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

சீமான் – நாம் தமிழர் கட்சி

காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி? இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை கைதியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு தி.மு.க. ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.

உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கி சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.

தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு தி.மு.க. நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கி சூடு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக தி.மு.க. அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணைக்கைதி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

மேலும், திருவேங்கடத்தின் என்கவுண்டர் திட்டமிட்ட படுகொலை என்றும் காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தவர் கொல்லப்பட்டதற்கு சிபிசிஐடியே பொறுப்பு என்றும் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் குற்றம்சாட்டியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com