கோயில் நிலங்கள் கொள்ளைதான் – வெள்ளை அறிக்கை வெளியிடச் சொல்கிறார் எல்.முருகன்!

எல்.முருகன்
எல்.முருகன்
Published on

தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலின் சொத்துகளையும் திருடி வருகிறார்கள்; கோயில்களில் திருடப்படும் சொத்துகள் யாருக்குப் போகின்றன எனத் தெரியவில்லை என்று கூறியிருந்தார். இது சர்ச்சையான நிலையில் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்தார்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “திமுக ஆட்சியில்தான் 5,500 கோடி ரூபாய் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டன. நிர்மலா சீதாராமனுக்கு பக்தி என ஒன்று இருந்தால் கோயில் பாதுகாப்பில் அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் தி.மு.க.வை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகிறார்கள்” என்று கடுமையாக சாடினார். இதற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதிலளித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, கோயில் சிலைகள் திருடப்பட்டுள்ளன. பல கோயில்களின் நிலங்கள் காணாமல் போய்விட்டன.” என்று கூறினார்.

”1986ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கொள்கை விளக்கப் புத்தகத்தில், 5.25 லட்சம் ஏக்கர் அளவில் கோயில்களுக்குச் சொந்தமாக நிலங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள்தான் இருப்பதாகக் கூறுகிறார்கள். மீதமுள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளது யார்?

அதற்கான வாடகை எங்கே? கோயில் நிலத்தை ஆக்கிரமித்த எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? தமிழகத்தில் ஏறத்தாழ 1.35 லட்சம் ஏக்கர் கோயில் நிலத்துக்கு எவ்வித ஆவணமும் அரசிடம் இல்லை. இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் நிலங்களை மீட்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்றும் எல்.முருகன் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com