மதவாத பிரமுகர் மணியன் கைது- திருவள்ளுவர், அம்பேத்கர், பெண்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டு!

ஆர்.பி.வி.எஸ். மணியன்
ஆர்.பி.வி.எஸ். மணியன்
Published on

திருவள்ளுவர், அம்பேத்கர், பெண்கள் மற்றும் பின் தங்கிய சமூகத்தினரை மிக மோசமாக இழிவுபடுத்திப் பேசியதற்காக, வி.எச்.பி. முன்னாள் தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னையில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கடந்த 11ஆம் தேதியன்று விவேக பாரதி என்ற பெயரில், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் கட்டடத்தில் மதவாதப் பிரமுகர் மணியன் பேசினார்.

அப்போது, “ராமர் பிறந்தநாளை நாங்கள் கிருஷ்ணாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். வள்ளுவர் என்றைக்குப் பிறந்தார் என்று உன்னால் சொல்ல முடியுமா. சொல்வதற்கு ஆதாரம் இருக்கா? அப்பா – அம்மா யாருனு தெரியுமா? தசரதனுக்குப் பிறந்தவன் ராமன் என்று நான் சொல்லுவேன். திருவள்ளுவர் யாருக்கு பிறந்தார்; தைரியம் இருந்தால் வந்து சொல்லு. ஒருவன் ஆதி பகவன் என்று சொல்கிறான். ஆதி யாரு? பகவன் யாரு? இவங்களெல்லாம் வாழ்ந்ததற்கு அடையாளம் இருக்கா?” என்று திருவள்ளுவர் குறித்து மிக மோசமாகப் பேசினார்.

இதைப்போல, “அரசியலமைப்புச் சட்டம் என்றதும் அதை அம்பேத்கர்தான் கொண்டு வந்தார் என்று சொல்லுவார்கள். பைத்தியங்கள், மூளையை அடகு வைத்துவிட்டார்கள். அம்பேத்கர் இவன் ஜாதி இல்லை. திருமாவளவன் ஜாதியா? திருமாவளவன் பறையர். அம்பேத்கர் சக்கிலியர். அம்பேத்கர் எப்படிடா உன் ஜாதியாக இருக்க முடியும்? இந்த ஊரில் இருக்கும் பறையர்கள் யாராவது சக்கிலியர்களைத் திருமணம் செய்துகொள்வார்களா? பறையர் யாராவது பள்ளர்களில் திருமணம் செய்துகொள்வார்களா? நீங்களெல்லாம் அடித்துக்கொண்டு இருப்பவர்கள். அடித்துத் திங்கறவனுங்க. அந்த அம்பேத்கர்தான் அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து கொடுத்தார் என்று இப்போது இருக்கின்ற ஆட்சியாளனும் அதையே சொல்லிக்கிட்டு இருக்கானுங்க. அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கியது தலைவர் என்றால் அது ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போட வேண்டும். கிளார்க் வேலை பார்த்தவன், டைப் அடித்தவன், பிழைத் திருத்தியவன் அதுதான் அம்பேத்கர்.” என்று மிகவும் தரக்குறைவாக அம்பேத்கரை இழிவுபடுத்தி இந்த நபர் பேசினார்.

இத்துடன், பெண்கள், பின்தங்கிய சமூகத்தினரையும் அவர் இழிவுபடுத்திப் பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மணியனின் வெறுப்புப் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்பட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர். அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஆர்.பி.வி.எஸ். மணியனை சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த நபர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153, 153A (1) (a), 505 (1)(b), 505 (2) IPC and Section 3 (1) (r), 3 (1) (u) and 3(1)(v) ஆகிய பிரிவுகளிலும், எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்படியும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com