‘ராமருக்கு வரலாறே கிடையாது!’ – அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்
Published on

“ராமருக்கு 3 ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ராமருக்கு வரலாறே கிடையாது'' என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் புதுக்கோட்டையில் கம்பன் கழக விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, “ராமர் ஆட்சியின் நீட்சிதான் திமுக ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்” என்று பேசி இருந்தார். இதை பலரும் விமர்சித்திருந்தனர். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியா அல்லது ராமன் ஆட்சியா என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று சீமான் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வர் ஆலயத்தில் நடைபெற்றது.

சுற்றுலாத்துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஒருங்கிணைத்திருந்த இந்த விழாவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா பேசும்போது, ராமருக்கு பிரதமர் மோடி கோயில் கட்டியிருப்பதாகவும் ராமரின் வரலாறு மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று பேசியதாக கூறப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ராமருக்கு 3 ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ராமருக்கு வரலாறே கிடையாது. அதே சமயம் ராஜேந்திர சோழன் வாழ்ந்ததற்கு அடையாளமாக சோழன் கட்டிய கோயில், வெட்டிய குளங்கள் இருக்கிறது. செப்பேடுகள், சிற்பங்கள் இருக்கின்றன. நாம் அதனை வைத்து ஆதாரப்பூர்வமாக ராஜேந்திர சோழன் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். ஆனால், ராமன் என்று ஒருவர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது, ஆதாரமும் கிடையாது.

அவர்களே ராமனை அவதாரம் என்று தான் கூறுகிறார்கள். அவதாரம் என்றால் யாரும் பிறக்க முடியாது. கடவுளாகப் பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது. ஆகவே, நம்மை மயக்கி நம் வரலாற்றை மறைத்து, வேறொரு வரலாற்றை உயர்த்திக் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகவே அதனை செய்கிறார்கள். இதை கலைஞர் கருணாநிதி உணர்ந்த காரணத்தால்தான், நமக்கான அடையாளம் எது? பண்பாடு எது? என்பதை நிறுவுவதற்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார்.

நம் மீது ராமாயணத்தை, மகாபாரதத்தைத் திணித்தார்கள். அது நமக்கானது கிடையாது. நமக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது திருக்குறள்தான்.” என்று பேசினார்.

கடந்த ஆண்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அமைச்சர் சிவசங்கர் ’ராமருக்கு வரலாறு இல்லை’ என்று பேசியிருக்கும் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com