எம்.என்.சி.களின் ஏஜண்டாகச் செயல்படும் தி.மு.க. அரசு- இராமதாஸ் சாடல்!

pmk ramadass
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
Published on

தொழிலாளர்களின் நலன்களை அடகு வைத்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக செயல்படுகிறது திராவிட மாடல் அரசு என்று பா.ம.க.  நிறுவனர் இராமதாசு சாடியுள்ளார். 


”காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உட்பட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டுவந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுகளில் சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களில் இன்னொரு பிரிவினர் வேலைநிறுத்தத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். உண்மையில் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. மாறாக தொழிலாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, சாம்சங் நிறுவன நிர்வாகம் தப்ப வைக்கப்பட்டுள்ளது.” என்று அவர் சாடியுள்ளார்.   

”தொழிலாளர்களிடையே பிளவை உண்டாக்கி, ஒரு பொம்மை அமைப்பை உருவாக்கி அதற்கு மகுடம் சூட்டும் பழைய சூழ்ச்சியையே  திமுக அரசு மீண்டும் செய்திருக்கிறது.”என்று கூறியுள்ள இராமதாசு, ”சாம்சங் தொழிலாளர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருந்த நிலையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ தொழிலாளர்களின் நலன்களை அடகு வைத்து விட்டு சாம்சங் நிறுவனத்தின்  நலன்களை பாதுகாத்திருக்கிறது.  இதன்  மூலம் , தொழிலாளர்களுக்கு பெருந்துரோகம் செய்திருக்கிறது.”எனக் கண்டனமும் தெரிவித்துள்ளார்.


”தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்தே தொழிலாளர்களின் நலன்கள் காவுகொடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 12 மணி நேர வேலை முறையை  திணிக்க சட்டம் கொண்டு வந்தது திமுக அரசு தான். கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு தான் அதை திரும்பப் பெற்றது.  சாம்சங் தொழிலாளர்கள் கோருவதும் 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை போன்ற  நியாயமான கோரிக்கைகள் தான். தொழிலாளர்களின் பக்கம்  அரசு நின்றிருந்தால், அந்த கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் நீதிபதியாக செயல்படவேண்டிய தமிழக அரசு, சாம்சங் நிறுவனத்தின் முகவராக மாறி தொழிலாளர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதை தொழிலாளர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.

சமூக நீதி அரசு என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக் கொள்ளும் திமுக அரசு ஒருபோதும் தொழிலாளர்கள் பக்கம் நின்றதில்லை; மாறாக, பன்னாட்டு நிறுவனங்களின் மனம் கோணக்கூடாது என்பதில் தான் திமுக அரசு கவனமாக இருந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும் என வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்குப் போட்டியாக திமுக ஆட்சிக்கு வந்தால் 75% வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க சட்டம் இயற்றுவோம் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால்,  இதுவரை அதை செயல்படுத்தவில்லை. காரணம்.... முதலாளிகளின் நலன்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற விசுவாசம் தான்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்த எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை. இதை திராவிட மாடல் அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். வேலை நிறுத்தத்தைத் தொடரும் சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு அரசு துணை நிற்க வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில்  உள்ள தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்குவதற்கான சட்டத்தை  உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் இராமதாசு கூறியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com